Header Ads

test

கூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரியணையேறுவதற்கு ஏணியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று காலால் எட்டி உதைத்துள்ளார். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருமே தமிழ் மக்களுக்கு எதிரிகள்தான். எனவே, மோசமான எதிரியை மாற்றுவதற்காக ஆட்சிமாற்றத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இவ்வாறு ஏணியாக இருந்தவர்களை எட்டி உதைக்கும் வகையில் ஜனாதிபதி இன்று செயற்பட்டுவருகிறார் என்பதை நாளாந்தம் வெளியாகும் செய்திகளிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.
எதிர்க்கட்சியில் இருக்கின்றபோதிலும் வடக்கு, கிழக்கு அபிவிருத்திகளில் பங்கேற்கவேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கென ஜனாதிபதியால் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு, கிழக்குக்கான விசேட செயலணியிலிருந்து அப்பகுதியைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சியான கூட்டமைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது; கவனத்தில் எடுக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. அதாவது, கூட்டமைப்பின் முகத்தில் தனது காலால் எட்டி உதைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் இருக்கின்ற படைகளில் ஏனைய மாகாணங்களில் இல்லாதளவு வடக்கிலும், கிழக்கிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். படையினர் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பது உலகறிந்த விடயம். சரத் பொன்சேகா உள்ளிட்ட தளபதிகளும் ஈடுபட்டனர். இவ்வாறு படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் மரம் வளர்ப்பு, வீடு கட்டுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
இரணைமடுக்குளத்துக்குப் பின்பகுதியில் பாரிய இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகின்றது. இது ஏன் நடக்கின்றது? பல்வேறு இடங்களில் சிங்கள மக்கள் பலவந்தமாகக் குடிமயர்த்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

No comments