யாழில் பல இடங்களில் இணைய சேவை முடக்கம்
சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் இணைய சேவை வழங்கும் பிரதான மார்க்க கேபிள்கள் விசமிகளால் துண்டாடப்பட்டதால் யாழில் பல இடங்களில் இன்று நண்பகலுக்குப் பின் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறிலஙகா ரெலிக்கொம் மற்றும் மொபிற்றல் வலையமைப்புக்களின் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் முடங்கியுள்ளன.
கடந்த சில வாரங்களாக யாழில் தமது மின் வழங்கல் தூண்களில் பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களை சிறிலங்கா மின்சாரசபை துண்டித்துவந்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக சிறிலங்கா ரெலிக்கொம்மும் தனது இணைய மற்றும் தொலைபேசி இணைப்பு தூண்களில் பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களை துண்டித்துவந்தது.
இந்நிலையில் இன்று நண்பகல் பூநகரி காட்டுப்பகுதியினூடாக ஊடறுத்தும் செல்லும் சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் இணைய சேவை வழங்கும் பிரதான மார்க்க கேபிள்கள் பல விசமிகளால் துண்டாடப்பட்டுள்ளன.
யாழில் பலர் சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை வழங்கியிருந்தனர். சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனமும் தமது கேபிள்கள் ஊடாக “பியோ ரி.வி” எனும் கேபிள் தொலைக்காட்சியினை வழங்கிவருகின்றது. இந்நிலையில் தமது இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதன் விளைவாக சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் இணைய சேவை வழங்கும் பிரதான மார்க்க கேபிள்கள் அறுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சில இடங்களில் இணைய சேவை சீர்செய்யப்பட்டுள்ளபோதிலும் மேலும் சில இடங்களுக்கு நாளை காலைக்குப் பின்னரே இணைய சேவைகள் வழமைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ள சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினர் துண்டாடப்பட்ட கேபிள்களை மீளப் பொருத்தும் நடவடிக்கையினை தமது பணியாளர்கள் இரவிரவாக மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டனர்.
Post a Comment