காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் வவுனியா போராட்டம் 500 ஆவது நாள்
காணாமற் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டு தர வலியிறுத்தி வுவனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் ஞாயிற்றுக் கிழமையுடன் 500வது நாளை எட்டவுள்ளது.
இப் போராட்டத்தின் 500வது நாளை முன்னிட்டு சனிக்கிழமை யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது. இதற்கமைய நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இவ் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இப் போராட்டத்தில் நல்லூர்க் கந்தன் ஆலய மதிய நேர பூசையின் போது 108 தேங்காய் உடைத்து 50 தீச்சட்டிகளும் எடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை காணாமற் போனவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தில் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற போராட்டம் கடந்த வாரம் 500வது நாளை எட்டியிருந்தது.
அதே போன்று வவுனியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டமும் நாளை ஞாயிற்றுக் கிழமையுடன் 500வது நாளை எட்டவுள்ளது. இந்த ஐநூறாவது நாளை முன்னிட்டே வவுனியா காணாமற்போனோர் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் இப் போராட்டமும் ஆலய வழிபாடுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் காணமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படுகின்ற இப் போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் சமூகத்தில் அக்கறை கொண்டுருக்கின்ற பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டு்ள்ளது.
Post a Comment