Header Ads

test

இந்திய மீனவர்களுக்கு எதிராக புதுச் சட்டம் பாய்ந்தது


இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் எதிராக கடந்த பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு வள்ளங்களை ஒழங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று  குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முதலாவது வழக்கு இதுவாகும். இதன்மூலம் நீதிவான் நீதிமன்றால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும் இந்திய மீனவர் ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனையை அனுப்பவிக்கவேண்டும் என்பதுடன் அவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகு ஒன்றுக்கு 6 மில்லியன் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்தவேண்டும். குற்றத் தீர்ப்பளிக்கும் அதிகாரமும் நீதிவானுக்கு உண்டு. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ஒரு மாதகாலத்துக்குள் நீதிவான் குற்றத்தீர்ப்பளிக்கவேண்டும் என்று சட்டம் வரையறை செய்கிறது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், படகுகள் இரண்டும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்திய மீனவர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர். வழக்கை ஆராய்ந்த நீதிவான், இந்திய மீனவர்கள் 12 பேரையும் இன்று 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்திய மீனவர்களுக்கு எதிராக புதிய சட்டத்தின் கீழ் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் அதிபதியின் சார்பில் யாழ்ப்பாண அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய மீனவர்கள் சார்பில் சட்டத்தரணி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையானார். சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் சுற்றவாளிகள் என மன்றுரைத்தனர். புதிய சட்டம் தொடர்பில் முழுமையாக அறிந்து கொள்வதற்காக எனக்கு சந்தர்ப்பம் வேண்டும் என சந்தேகநபர்களின் சட்டத்தரணி மன்றில் கோரினார். இதனை ஆராய்ந்த மன்று நாளைவரை வழக்கை ஒத்திவைத்தது.

No comments