இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்தவே முனைகிறோம் - ராஜித
சிறிலங்காவில் முதலீட்டுத் திட்டங்களில் இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்த முனைவதாக, சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன,
“ முதலீடு செய்ய விரும்பும் இழப்புகளைத் தந்த திட்டங்களை செயற்படுத்துவதற்கும் , சிறிலங்கா அனைவருக்கும் வாய்ப்புகளை திறந்தே வைத்துள்ளது.
மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் வெள்ளை யானைகளாகவே பார்க்கிறது. இவை செயற்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே இலாபத்தை தரவில்லை.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அதேவேளை, மத்தல விமான நிலையம் தொடர்பாக இந்தியாவுடன், உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளவுள்ளது.
சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.
சிறிலங்காவில் சீனா மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கிறது என்று இந்தியா உணர்கிறது.
அம்பாந்தோட்டையை சீனாவுக்கும், மத்தலவை இந்தியாவுக்கும் கொடுத்து, இரண்டு தரப்புகளையும் மகிழ்ச்சிப்படுத்தி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த இராஜதந்திரப் பிரச்சினையை தீர்க்க சிறிலங்கா முனைகிறது ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment