Header Ads

test

டெனீஸ்வரன் விவகாரம்:வீணான மாகாணசபை அமர்வு!

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் எந்த கட்சியினை சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதில் வடமாகாணசபை இன்று மணித்தியாலக்கணக்கில் தண்டமாக கூடி காலத்ததை தின்றுள்ளது. 

வடமாகாணசபையின் அமர்வு இன்று செவ்வாய்கிழமை 10ம் திகதி நடைபெறவிருந்த நிலையில்; பா.டெனீஸ்வரனை அனந்தியின் அமைச்சு கதிரையில் இருத்தி குழப்பங்களை மேற்கொள்ள தமிழரசுக்கட்சி திட்டமிட்டிருந்த போதும் அது படுதோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட டெனீஸ்வரன் தான் அமைச்சு கதிரைக்கு ஆசைப்படுபவன் அல்லவென தெரிவித்ததுடன் சிவாஜிலிங்கம் தேவையற்று தன்னை பற்றி கருத்துக்களை வெளியிடுவதாக எச்சரித்தார்.

இதன் போது சிவாஜிலிங்கம் குறுக்கிட்டு தற்போது தாங்கள் டெலோவிலா அல்லது வேறு கட்சியிலா இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த டெனீஸ்வரன் அந்த கட்சி வலிந்து அழைத்தாலும் தான் அங்கு வரப்போவதில்லையென்றார்.

அவ்வாறாயின் டேலோவில் இல்லையென ஒத்துக்கொள்கிறீர்கள்.இப்பொழுது எந்த கட்சியில் இருக்கிறீர்கள் என பதில் கேள்வி போட டெனீஸ்வரன் மடங்கிக்கொண்டார்.

இதனிடையே டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருப்பது நீதிமன்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழரசு சயந்தன் கூற அவருக்கு அவைத்தலைவர் ஒத்தூத மணிக்கணக்கில் அமர்வு நீண்டு சென்றது.

டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமுல்படுத்தாமை பற்றி திரும்ப திரும்ப டெனீஸ்வரன் முதல் சயந்தன் வரையாக பிரஸ்தாபித்துக்கொண்டேயிருந்தனர்.

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவினை நிறுத்த வேண்டும் என சின்னத்துரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவனத்தின் ஊடாக முதலமைச்சர் உச்ச நீதிமன்றில் ஓர் வழக்குத் தாக்கல் செய்துள்ளநிலையில் முதலமைச்சர் தரப்பில் மௌனமே பதிலாக இருந்தது.


இன்றைய அமர்வில் டெனீஸ்வரன் அமைச்சு கதிரைகளில் அமர்ந்து இடம்பிடிக்கலாமென்ற அச்சத்தில் அமைச்சர்கள் பலரும் நேரகாலத்துடன் சபைக்கு வந்திருந்தனர்.

இதனிடையே டெலா கட்சி சார்பில் முன்னர் அமைச்சராக தெரிவாகியிருந்த பா.டெனீஸ்வரன் தற்போது தமிழரசு பக்கம் ஒட்டியிருந்து வருகின்றார்.எனினும் தான் தமிழரசினில் இணைந்து கொண்டுள்ளமையினை வெளிப்படையாக கூற டெனீஸ்வரன் பின்னடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

No comments