Header Ads

test

வடக்கு நிலை அவ்வளவு மோசமாக இல்லை - சிறிலங்கா சட்டம் ஒழுங்கு அமைச்சர்

ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் கூறப்படுவது போன்று, வடக்கில் ஒன்றும் மோசமான நிலை இல்லை என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியிலும், இந்த மாத தொடங்கத்திலும், யாழ்ப்பாணத்தில் திடீரென குற்றச்செயல்களும், சமூக விரோத செயல்களும் அதிகரித்திருந்த நிலையில், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்றுமுன்தினம் அங்கு சென்றிருந்தார்.

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன், யாழ்ப்பாணம் சென்றிருந்த அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து, அரச அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

இதுகுறித்து, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,

“தென்னிந்திய தமிழ் திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களாலேயே ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக் காட்சிகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பயமுறுத்துவதற்காக, கொள்ளைகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மக்களை அச்சுறுத்துவதற்கு வாள்களை வீசுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள களநிலைமைகள் குறித்து, அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் விளக்கமாக கூறினர்.

ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும், சித்திரிக்கப்படுவது போல, யாழ்ப்பாணத்தில் ஒன்றும் நிலைமைகள் மோசமாக இல்லை.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்றைய சந்திப்பின் போது, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் தெரிவித்திருந்தார்.

அதனை, சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments