நுழைய அனுமதிப்பதில்லை: சிறிலங்கா இராணுவம் முடிவு
நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம், அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ வேண்டாம், அல்லது அனுசரணை வழங்க வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளது.
சில அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறைகளை விமர்சித்து வருகின்றனர். இதுவே, சிறிலங்கா இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
தீவிரவாதிகளை செயல்களை பாராட்டி சிலர் உரையாற்றுவது, வடக்கு- கிழக்கில் அமைதியை விரும்பும் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது என்றும், அவர்களின் செயற்பாடுகள், மக்களை மீண்டும் போருக்குள் தள்ளுவதாக இருப்பதாகவும் சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
சிறிலங்கா இராணுவம் நல்லிணக்க பொறிமுறைக்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும், வடக்கு -கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளுக்கு தம்மால் தீர்வை வழங்க முடிந்துள்ளது என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
Post a Comment