பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு:இந்தியாவிற்காக காத்திருப்பு!
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தொடர்பில் இந்திய அதிகாரிகளது பதிலிற்கு காத்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பலாலி மற்றும் அதனையண்டிய பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக் காணிகள், விவசாயக் காணிகள், மீன்பிடித் துறைமுகங்கள் அடங்கலான வளமான கடற்கரைப்பகுதிகள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.அப்பகுதியில் பலாலி விமான நிலையம் இருக்கின்ற நிலையில், அவை இதுவரையில் குறித்த காணிகள் மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகளுக்காக அந்தக் காணிகள் சுவீகரிக்கப்படுமென முன்பு ஒரு செய்தி வந்திருந்த நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்றின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு பொது மக்களது காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கென எமது மக்களின் காணிகளில் 600 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படும் என்றும் கடந்த 19ம் திகதி ஊடகங்களில் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் எஸ்.பாலச்சந்திரன் குறித்த விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகளிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.குறித்த விபரங்கள் கிடைத்த பின்னரே எவ்வளவு காணி மேலும் சுவீகரிக்கப்படுமென்ற தகவலை வெளியிட முடியுமெனவும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறியத்தந்துள்ளதாக தெரியவருகின்றது.
Post a Comment