Header Ads

test

வடக்கு ஆளுநரின் தன்னிச்சை முடிவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடை



விரும்பிய ஒருவரை பதவியுயர்த்த நியமன ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக வடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம்சங்கர் புதிதாக அப்பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள செயன்முறைக்கு எதிராக இன்று இடைக்கால தடைக் கட்டளை விதித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நேர்முகத் தேர்வு மூலம்சி. சதானந்தனை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி எனும் பதவியில் இருந்து முதுநிலை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி என்ற பதவிநிலைக்கு பதவியுயர்த்தியது.

இந்நியமனத்திற்கு எதிராக எஸ். எம். ராஜா ரணசிங்க என்பவர் வட மாகாண ஆளுனருக்கு மேன்முறையீடு செய்தார். மாகாண பொதுச் சேவை தொடர்பிலான அதியுயர் அதிகாரம் ஆளுநரிடமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண அவைத் தலைவர் சி. வி .கே சிவஞானமும், ரணசிங்கவுக்கு பரிந்துரை செய்து ஆளுனருக்கு கடிதம் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதுநிலை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி பதவி உயர்வு தொடர்பில் வட மாகாண விளையாட்டு துறை சேவை பிராமண குறிப்புக்கள் ரணசிங்கவுக்கு சாதகமாக விசேடமாக திருத்தப்பட்டன.

கடந்த மாதம் எவ்வித காரணங்களும் குறிப்பிடாமல் சதானந்தனின் பதவியுயர்வு வட மாகாண ஆளுநரின் பரிந்துரையின் பெயரில் மாகாண பொது சேவை ஆணைக்குழுவால் ரத்து செய்யப்பட்டது. அத்தோடு முதுநிலை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிப் பதவிக்கான விண்ணப்பங்களும் கோரும் அறிவித்தலை பொதுச் சேவை ஆணைக்குழு விடுத்தது.

கடந்த 11.07.2018 அன்று சதானந்தன் தனது சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் மூலமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் சதானந்தன் முறையாக நியமிக்கப்பட்ட பின்னர் வேறொருவரை அப்பதவிக்கு நியமிக்கும் நோக்கில் சேவை பிராமண குறிப்புக்களைத் திருத்துவது எதேச்சதிகாரமானது என்றும் தான்தோன்றித்தனமானதும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு மிக அடிப்படையில் சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குட்படுத்தித்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி குருபரன் மற்றும் சட்டத்தரணி திருக்குமரன் ஆகியோர் மனுவை ஜூலை 13, ஜூலை17 மற்றும் ஜூலை19 மேல் நீதிமன்றில் ஆதரித்தனர். அதன் அடிப்படையில் முதுநிலை மாவட்ட விளையாட்டு அதிகாரியாக வேறொருவரை நியமிக்கும் செயன்முறையை தடுத்து நிறுத்தும் இடைக்காலக் கட்டளையை நீதிபதி இன்று பிறப்பித்தார்

No comments