மகிந்தவிடம் ஆதரவு கோரினேன் - சம்பந்தன் தெரிவிப்பு
புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஆதரவு கோரியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் கொழும்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன், இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்புக் குறித்து திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்,
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் கலந்துரையாடினோம்.
தாம் ஆட்சியில் இருந்த போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் தம்மிடம் இருந்த்து என்றும் ஆனால் அதனைப் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.
கடந்த காலத்தை மறந்து விட்டு, புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதரவு அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
தமிழ் மக்களுக்காக மாத்திரமன்றி முழு நாட்டுக்காகவும், இந்த விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது அவரது கடமை என்றும் கூறினேன்.
தாம் அதுபற்றி சிந்திப்பதாக அவர் கூறினார், மறுப்புத் தெரிவிக்கவில்லை.
எம்மைப் பொறுத்தவரையில், எவரது பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரது ஒத்துழைப்பையும் பெற விரும்புகிறோம்.
ஒத்துழைப்பு வருகிறதோ இல்லையோ அதற்கு முயற்சிக்க வேண்டியது கடமை.
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தமது நிலைமைகளைப் புரிந்து கொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.
Post a Comment