யாழ் அரச அதிபர் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறார் - கஜேந்திரன் சாடல்
கடந்த வாரம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிதிகளான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தைக் கேட்டு கைதட்டினார்கள், விசிலடித்தார்கள் என்பதற்காகப் பிரதேச செயலகங்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் விசாரணையொன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபரின் இத்தகைய விசாரணைக் கோரிக்கையானது ஒரு கேலிக்கூத்தான விடயம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் இது முற்றுமுழுதாக ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றதொரு விடயம். எனவே, இத்தகைய செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(05) யாழ்.கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் ஆயுதமேந்துவது தவறு, வன்முறையில் ஈடுபடுவது தவறு என்பதால் அரசாங்கத்தின் கோமாளித்தனமான, ஏமாற்றுத்தனமான, நயவஞ்சகத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தங்களின் நடவடிக்கைகளை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துகின்றார்கள்.
பொதுவாக வடக்கு, கிழக்கிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் மிகவும் நாகரீகமானவர்கள், பண்பானவர்கள், அன்பானவர்கள், பொதுமக்களுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய வகையில் சேவையாற்றி வருபவர்கள். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிறந்ததொரு அரசாங்க அதிபராகக் காணப்படுகின்றார் என்றால் அவர் பல்வேறு சேவைகளையும் நேரடியாகச் சென்று செய்வதில்லை. அவருக்குக் கீழுள்ள உத்தியோகத்தர்களே நேரடியான சேவைகளில் ஈடுபடுகிறார்கள்.
இத்தனை காலமும் செவ்வனே சேவை செய்து வரும் உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் உரையைக் கேட்டு கைதட்டி, விசிலடிக்க வேண்டியதொரு சூழல் ஏற்பட்டிருந்தால் அதுவும் அவர்களின் ஆதங்கத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது. இதுவும் ஒருவகையில் நோக்கினால் ஜனநாயகமானதொரு செயற்பாடே.
ஹிட்லர் போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடாத்தியுள்ளார். ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் போன்று தான் தற்போதும் இந்த நாட்டில் மைத்திரி- ரணிலின் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
நல்லாட்சி எனும் போர்வையில் நடைபெறும் இந்த ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்குப் பூட்டுப் போடுவதற்கு வேதநாயகன் முற்படுகின்றார். பழிவாங்கும் நடவடிக்கையாகவே இத்தகைய நடவடிக்கையை நாங்கள் கருதுகின்றோம். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உழைக்க வேண்டிய அரசாங்க அதிபர் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கின்ற செயற்பாட்டிற்குத் துணையாக நிற்கின்றார்.
பேரினவாத அரசுக்கு முண்டு கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்தின் தவறுகளை மூடி மறைக்கும் வகையிலும் அவருடைய இத்தகைய விசாரணைக் கோரிக்கை அமைந்திருக்கிறது. அவர் இத்தகைய விசாரணை முன்னெடுப்புக்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மேலும் கேட்டுள்ளார்.
Post a Comment