தகவல் திரட்டுவதை ஊடகங்களுக்கு கசியவிட்டது தொடர்பில் விசாரணை
முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தகவல் திரட்டும் தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தது யார் என ஊடகவியலாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் ஆகியோரிடம் இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் , உடையார் கட்டு , சுதந்திரபுரம் , கைவேலி , ரெட்பானா மற்றும் மாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களின் விபரங்களை விண்ணப்ப படிவம் ஒன்றின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் வர்த்தக நிலையங்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 57 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களை சேகரிப்பதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.
அது தொடர்பிலான செய்திகள் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களில் வெளியாகி இருந்தன. அந்நிலையில் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியது யார் என நேற்றைய தினம் முல்லைத்தீவில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Post a Comment