எங்கள் மேல் எதையும் திணிக்காதீர்கள் - விக்கி மைத்திரிக்கு எழுதிய காரசாரமான கடிதம்
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் 09.07.2018
அண்மையில் வடகிழக்கு மாகாண முன்னேற்றப் பணிகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில் வடமாகாண முதலமைச்சர் இடம்பெற்றிருந்ததை வாசகர்கள் அறிவார்கள். 14.06.2018ம் ஆண்டு நியமித்த ஜனாதிபதி அவர்களின் நியமனக் கடிதம் அண்மையில் 05.07.2018லேயே இருபத்தியொரு நாட்களின் பின்னர் முதலமைச்சரின் கைகளுக்குக் கிடைத்தது.
அந்தத் தாமதத்தையுஞ் சுட்டிக்காட்டி நீண்ட ஒரு கடிதத்தை முதலமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அவரின் கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு -
தங்களால் தலைமை தாங்கப்படவிருக்கும் செயலணி கௌரவ பிரதம மந்திரி, 15 கௌரவ மத்திய அமைச்சர்கள், வடகிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், வடமாகாண முதலமைச்சராகிய என்னையும், தற்போது வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரையும், இராஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிரதமமந்திரி அடங்கிய மத்திய அமைச்சர்கள் அனைவரதும் அமைச்சுக்களின் செயலாளர்கள், வடகிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், இராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், யாழ் பாதுகாப்புப் படையின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
என்னையும் எமது பிரதமசெயலாளரையுந் தவிர வடமாகாணத்தை அங்கத்துவம் வகிக்க வேறெவரும் அதில் இல்லை. செயலணியின் செயலாளர் (திரு.சிவஞானசோதி) வடமாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மத்திய அரசின் அலுவலர் ஆவார்.
செயலணியின் வடகிழக்கு பற்றிய முன்னேற்ற செயற்பாடுகள் நாட்டின் ஐக்கியத்தையும் ஒன்றிணைவையும் ஏற்படுத்தி சமமான சமூக பொருளாதார வளர்ச்சியையும் வருமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் மீளாய்வு உள்ளடங்கிய பல வித பணிகள் குறித்த செயலணிக்கு அடையாளப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கில் நடைபெற்றுவரும் முன்னேற்றப் பணிகள் அனைத்தையும் நடத்துவிக்கும், ஒருங்கிணைக்கும், மேற்பார்வை பார்க்கும் பணி ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
என்னையும் எமது பிரதமசெயலாளரையும் இந்த செயலணியினுள் உள்நுழைத்தமைக்காக நான் உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பல மத்திய அமைச்சர்களும் அவர்களின் அமைச்சுச் செயலாளர்களும் இந்தச் செயலணியில் சேர்க்கப்பட்டிருப்பினும் எமது வடமாகாண அமைச்சர்கள் இதில் விடுபட்டுள்ளார்கள். எமது அமைச்சர்களின் மற்றைய செயலாளர்களும் விடுபட்டுள்ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவறாக எனக்குப்படுகின்றது.
அடுத்து வடகிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது. அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது. எமது வடகிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் அரசியல் தீர்வு பெற்ற பின்னரே உண்மைக்கும் சமரசத்துக்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
தெற்கானது வடகிழக்குக்கு இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை செய்திருப்பதாக ஜெனிவாவிலோ வேறெங்குமோ உலக சமுதாயத்திற்கு நாம் எடுத்துக் காட்டினாலும் போர் முடிந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு மக்களின் அடிப்படை அரசியல்ப் பிரச்சனைகளைத் தொடர்ந்து வந்துள்ள மத்திய அரசாங்கங்கள் தீர்க்கவில்லை என்ற விடயத்தை நாம் மூடி மறைக்கமுடியாதிருக்கும்.
உங்களால் இதுவரை தரப்பட்டுள்ள பொருளாதார நன்மைகள் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்களினால் எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பொறுப்பற்ற சிதைவுகளுக்கும் பெரும் அழிவுகளுக்குஞ் செய்யப்படும் பிராயச்சித்தமே. மேற்படி அழிவுகளை நீங்கள் ஏற்படுத்தியமைக்குக் காரணம் தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் கௌதம புத்தர் காலத்துக்கு முன்பிருந்து அடையாளப்படுத்தக் கூடிய இந்நாட்டின் ஒரு பகுதியின் பெரும்பான்மையினராய் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமையே. வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளையும் உரித்துக்களையும் ஏற்றுக் கொள்ளாமையே போருக்குக் காரணமாக இருந்தன.
எனவேதான் பொருளாதார அபிவிருத்தியால் இன ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தலாம் என்று நீங்கள் நினைப்பதின் தாற்பரியம் என்னவென்றால் எம் மக்கள் தமது அரசியல் உரித்துக்களையும் மனித உரிமைகளையும் நீங்கள் தரும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கைவிட்டுவிடுவார்கள் என்று நீங்கள் எண்ணுவதே.
மூன்றாவதாக மேற்படி செயலணியின் அமைப்புருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக இருக்கின்றது. கிட்டத்தட்ட முழுமையாக மத்திய அரசாங்க அணியினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள இந்த செயலணியால் வடகிழக்கில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்கள். அதுவும் அரசாங்க அமைச்சர்கள், அவர்களின் செயலாளர்கள், படையினர், ஆளுநர்கள் சேர்ந்து இவ்வாறான சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது வேடிக்கைமிக்கது.
தடவைக்குத் தடவை நான் அதி கௌரவ ஜனாதிபதியான உங்களுக்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கும் கூறிவந்த ஒரு விடயந்தான் அபிவிருத்தியை மத்தியானது மாகாணத்தில் பலவந்தமாக உட்புகுத்தக்கூடாதென்பதை. வடகிழக்கு மாகாண மக்களே தமக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள்; தமது தேவைகளை அடையாளப்படுத்தக் கூடியவர்கள். தற்போது நிதியானது மத்தியின் கையில். செயற்திட்டங்களை வகுப்பது மத்தி. நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்தியின் அலுவலர்கள் வசம். ஆனால் எமது மாகாண அலுவலர்களே தமக்கு ஆணையிட்டவாறு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான ஒரு தலைப்பட்சமான செயல்கள் மூலம் நீங்கள் எதிர்பார்ப்பது சமாதானம், அமைதி, ஐக்கியம் மேலும் ஒன்றிணைவது.
இவ்வாறான பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை நீங்கள் மீளாய்வு செய்யும் அதேநேரம் வடகிழக்கு மாகாணங்களின் இனப் பரம்பலை மாற்றும் விதத்தில் குடியேற்றங்கள் அங்கு தற்போது நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. மற்றைய மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் பேணப்படவேண்டிய காடுகளின் விகிதாசாரம் அங்கு பேணப்படாமல் எமது மக்களின் காணிகள் வனத் திணைக்களத்தினால் வடகிழக்கில் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் மற்றும் பல மத்திய திணைக்களங்கள் படையினருடன் சேர்ந்து எமது மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பெருவாரியான காணிகளைக் கையகப்படுத்தி வருகின்றன.
அரசாங்கமானது வடக்கு மாகாண முன்னேற்றத்திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என்றால் வடமாகாண முதலமைச்சரும் பிரதம செயலாளரும் மேற்படி செயலணி நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை. மத்திய அமைச்சர்கள் அவர்தம் செயலாளர்கள், படையினர் எல்லோரும் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் சேர்ந்து வேண்டிய தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது எமது மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்பாடுகள் யாவும் மேலிருந்து கீழ் நோக்கி ஒரு தலைப்பட்சமாக இயற்றப்படும் செயல்களே.
உலக நாடுகளுக்கு எம்மைப்பற்றி உயர்வாகக் கூறுவதற்கு அன்றி இவ்வாறான நடவடிக்கைகளால் நன்மை ஏதும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளால் சாந்தி, சமாதானம், ஐக்கியம், ஒன்றிணைப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று நான் நம்பவில்லை.
எனவே மேற்படி செயலணி தனது வேலையை செவ்வனே செய்து கொண்டு போகட்டும். அதன் முடிவில் குறித்த செயலணி தனது அறிக்கையை குறிப்பிட்ட காலத்தில் எமக்கு அனுப்பட்டும். எனது அமைச்சர்களுடன் அதை வைத்து நாம் அதன் தாற்பரியங்களையும் பெறுபேறுகளையும் ஆராய்ந்து பார்க்கின்றோம். ஆனால் இவ்வாறான மாட்சிமை பொருந்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சுச் செயலாளர்கள், படையினரை உள்ளடக்கிய ஒரு உயர் மட்ட செயலணியில் நானும் ஒரு பொருட்டாக இணைந்து கொள்வதை தேவையற்றதொன்றாகவே கருதுகின்றேன்.
வடகிழக்கிற்கான முன்னேற்ற நடவடிக்கைகள் யாவும் உள்;ர் மக்களாலும் அவர்தம் பிரதிநிதிகளாலும், மாகாண சகல மட்ட அலுவலர்களாலுமே நடத்தப்படவேண்டும் என்பதே எனது கருத்து.
மத்திய அரசாங்கம் அதற்கான நிதியையும் அறிவுரைகளையும் அனுசரணைகளையும் வழங்கவேண்டும். அதிகாரப் பகிர்வென்பது இதையே! இல்லையேல் தற்போது காண்பது போல் அபிவிருத்தியும் அதிகாரப்பகிர்வும் ஹாஸ்யப் பொருட்கள் ஆகிவிடுவன.
எமது கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ சம்பந்தன் அவர்கள் அண்மையில் கூறியவாறு இந்த வருடமுடிவுக்குள் எமது அரசியல் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னரே அபிவிருத்தி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அரசியல் பிரச்சனைகளை மாண்பு மிகு ஜனாதிபதியாகிய நீங்கள் விரைவில் தீர்த்து வைத்த பின் நாம் சம அந்தஸ்துடையவர்களாக உட்கார்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப இடமளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
நன்றி
Post a Comment