Header Ads

test

மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் வழக்கு ஒத்திவைப்பு


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எதிர் மனுதாரரின் ஆட்சேபணைக்காக வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மனு தாரரின் நிவாரணங்களில் ஒன்றான யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் வி.மணிவண்ணன் சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும் வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து கட்டளையிடுமாறு கோரி மனுதாரரின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் முன்வைக்க விண்ணப்பம் செய்தார்.

எனினும் எதிர் மனுதாரரான யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் வி.மணிவண்ணனின் தரப்பு சட்டத்தரணிகள், மனுத் தொடர்பில் ஆட்சேபனையை முன்வைக்க உள்ளதாக விண்ணப்பம் செய்தனர். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பத்மன் சூரசேன, அர்ஜூன உபயசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு, எதிர் மனுதாரரின் ஆட்சேபனைக்காக மனுவை வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பாசையூரைச் சேர்ந்த ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்டோரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

No comments