Header Ads

test

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார் சரத் என் சில்வா


தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியமைக்கு எதிராக அரசியலமைப்பின் படி வழக்கு தொடர முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய ஒன்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் படி விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்துக்கு பின்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தூண்டல் இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

விஜயகலாவின் கூற்று பிரிவினைவாதம் தொடர்பாக வழங்கிய சத்தியப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். அதனால் சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யமுடியும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சராக இருந்தவர். தனிப்பட்ட முறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருப்பவர். அவரே இந்த உரையை ஆற்றியிருக்கின்ற நிலையில் அவரது தனிப்பட்ட நோக்கத்திற்கு இதனை மேற்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

விஜயகலா மகேஸ்வரன் எதனைக் கூறினாலும் யாருமே தத்தமது சிந்தனையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு பெரிதான அரசியல் அனுபவமும், செல்வாக்கும் இல்லை. அவர் ஏன் இதனைக் கூறினார் என்பதே பிரச்சினை.

அவர் இராஜினாமா செய்துவிட்டார். இதுபோன்று திலக் மாரப்பன, விஜேதாஸ ஆகியோரும் இராஜினாமா செய்து மீண்டும் பதவிகளை பெற்றுக்கொண்டதுபோல விஜயகலாவும் மீண்டும் வரலாம்.

அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்திற்கு முரணான கருத்தை வெளியிட்ட போதிலும் இதன்படி விஜயகலா செய்யவில்லை. ஆகவே அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியாது.

அதற்குப் பதிலாக அவர் விரைந்து அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டார். மக்களை திசைதிருப்பும் செயலாகவே இதனை பார்க்கின்றோம். என்றும் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

No comments