நடமாடும் சேவை:யாவரும் வரலாம்!
நாளை வியாழக்கிழமை 19ம் திகதி மன்னாரில் நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது பிரச்சினைகளிற்கு தீர்வை பெறவிரும்பும் அனைவரும் வருகை தந்து பயன்பெறலாமென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார்.
வடக்கின் கல்வியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களின் தாபன நிர்வாக அலுவலகக் குறைகளைக் களைந்து கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் மாபெரும் நடமாடும் சேவை ஒவ்வொரு வலயங்களிலும் நடைபெறவுள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலின் கீழ், அவரது பங்குபற்றுதலுடன் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் அனைவரினதும் பங்கேற்புடன் அந்தந்த வலயங்களில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளான சுயவிபரக் கோவைகள் பூர்த்தி,சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள், விதவைகள் அநாதைகள் ஓய்வு ஊதிய இலக்கம், ஆசிரியர் பதிவு இலக்கம், கற்கை விடுமுறைகள்,சம்பளமற்ற விடுமுறைகள்,வெளிநாட்டு விடுமுறைகள்,பிரசவ விடுமுறைகள்,பிரமாணக் குறிப்பின்படி உள்ளீர்ப்பும் நியமனமும்,பொருத்தமான நேரசூசியின்மை,ஏனைய நிர்வாகம், பாடசாலை சார்ந்த பிரச்சனைகள்,ஆசிரியர் விடுதிகள்,பாடசாலையின் அடிப்படைத் தேவைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வு வழங்குவதற்காக 19.07.2018 தொடக்கம் 02.08.2018 வரை வடக்கு மாகாணத்தின் சம்பந்தப்பட்ட பன்னிரண்டு; வலயங்களிலும் நடத்தப்படவுள்ளது.
அந்த வகையில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு (19 ஆம் திகதி) மன்னார்.20 ஆம் திகதி யாழ்ப்பாணம்,21 ஆம் திகதி தென்மராட்சி,23 ஆம் வடமராட்சி,24 ஆம் திகதி கிளிநொச்சி,25 ஆம் திகதி முல்லைத் தீவு,28 ஆம் திகதி வவுனியா தெற்கு,30 ஆம் திகதி மடு,31 ஆம் திகதி தீவகம்,ஓகஸ்ற் மாதம் 1ஆம் திகதி வலிகாமம்,02 ஆம் திகதி துணுக்காய் வலயங்களிலும், ஜூலை மாதம் 28 ஆம் திகதி முற்பகல் 8.30 மணிக்கு வவுனியா தெற்கு வலயங்களிலும்,அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
குறித்த வலயங்களில் கடமையாற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் நாளை நேரில் வருகை தந்து பயன்பெறலாமென்றும் முன்னதாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கலாமென்ற நிபந்தனைகள் ஏதுமில்லையென கலாநிதி.க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment