மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனிநபர்களாலும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மிகவும் மதிக்கப்படுகின்ற புலமையாளரும், மனிதஉரிமைகள் ஆர்வலரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருமான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிராக விடப்பட்ட கொலை அச்சுறுத்தல்களையும், வன்முறையையும், வெறுப்புரையையிட்டும் நாம் பெரிதும் அதிர்ச்சியடைகின்றோம். இந்த கூற்றுக்கள் பற்றி எமது பாரிய கரிசனையினையும்,அதிர்ச்சியினையும் நாம் வெளியிட விரும்புவதுடன் எமது ஒத்துழைப்பினையும் கலாநிதி உடகமவிற்கு வழங்க விரும்புகின்றோம்.
இச்சந்தர்ப்பத்திலே கலாநிதி தீபிகா உடகமவின் தலைமையின் கீழ் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான, தன்னிலையான மற்றும் வெளிப்படைத்தன்மைமிக்க கொள்கை இடையீடுகளை நாம் வரவேற்கின்றோம். அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளடங்கலாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அமுல்படுத்தியுள்ள தனிப்பட்ட வழக்குகள் மற்றும் ஆலோசனைச் செயன்முறை மற்றும் பொறிமுறை மீதான தன் முனைப்பான விசாரணைகளையும் நாம் வரவேற்கின்றோம். ஆணைக்குழு மேற்கொண்ட பணிகளுள் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக இராணுவ ஆளணியினரைப் பரிசீலிப்பதற்காக மேற்கொண்ட சுயாதீனமான பணியும் உள்ளடங்குகின்றது.
இதுவே அண்மைய அச்சுறுத்தலுக்குக் காரணமாகியுள்ளது. இது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையின் ஓரங்கமாக வருகின்ற ஒருவிடயம் என்பதை நாம் வலியுறுத்துகி;ன்ற அதேவேளை அச்சுறுத்தல்களைத் தாண்டி பணிகளைத் தொடரும் அவர்களின் கடப்பாட்டினையும் மெச்சுகின்றோம். சில ஊடகங்கள் வெளியிட்ட தவறான மற்றும் பொய்யான தகவல்களுக்குப் பதிலாக இப்பணியின் செயன் முறையினைத் தெளிவுபடுத்தும் வெளிப்படைத்தன்மையினை நாம் வரவேற்கின்றோம்.
‘ஜாதிகசங்விதானஎகதுவ’எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்;திப்பில் முன்னாள் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகரவினால், கலாநிதி உடகமவுக்கு எதிராக, 2018 ஜூன் 29 வாராந்த மவ்பிம பத்திரிகையில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல்கள் ஐக்கியநாடுகள் அமைதி காக்கும் பணிக்காக இராணுவ ஆளணியினரைப் பரிசீலிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலும்,இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டிலும் ஆணைக்குழு மேற்கொண்ட சுயாதீனமான பணியுடன் நேரடியாகத் தொடர்டையதாகும். விடுதலைப்புலிகளின் நலன்களை மேம்படுத்த அரசசார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து கலாநிதி உடகம தேசத் துரோகமிகுமுறையில் செயற்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதுடன் தேசப்பற்றுமிக்க அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் தேசத் துரோகிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டுமெனவும் ரியர் அட்மிரல் வீரசேகர அழைப்பு விடுத்துள்ளார்.
குலாநிதி உடகமவிற்கு எதிரான அச்சுறுத்தலின் தன்மை நிச்சயமாகப் புதியதல்ல .ரியர் அட்மிரல் வீரசேகர மற்றும் அவரைப் போன்ற ஏனையோர் தம்முடன் இணங்காதோரின் அபிப்பிராயங்களையும், செயற்பாடுகளையும் தொடர்ச்சியாகத்தரக்குறைவாகவும், அங்கீகரிக்காமலும், மறுதலித்தும்; பேசிவருவதுடன் அவை தொடர்பில் நியாயமானமற்றும் தர்க்கரீதியான விவாதத்தில் ஈடுபடாமல் ‘என்ஜீஓக்களினதும், பயங்கரவாதிகளினதும் ,தேசப்பற்றற்றவர்களினதும் வேலை’என முத்திரை குத்தி வருகின்றனர்.பிரதான ஊடகங்களும் என்ன கூறப்படுகின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்யாமலும், விசாரிக்காமலும் இவ்வாறானவர்களின் கூற்றுக்களை அப்படியே மறுஉருவாக்கம் செய்துவருகின்றன.
ஆணைக்குழவின் தலைவர் மீதும்,ஆணைக்குழுவின் மீதும் ஜனாதிபதியும்,பிரதமரும், ஏனைய அரசியல் தலைவர்களும் கொண்டுள்ள நம்பிக்கையினை பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment