புலனாய்வு அச்சுறுத்தலை மீறி அலுவகலம் திறப்பு
வன்னி இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தரவேண்டும் அல்லது அதற்கான பொறுப்புகளை அரசு கூறவேண்டும் என்பதற்காக இன்று (11) மன்னார் சாவற்காட்டுப் பகுதியில் குறித்த அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசானது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராமலும், அதற்கான பொறுப்பு கூறாமலும் காலத்தை இழுத்தடித்து, போராட்டத்தை மறக்கச் செய்யும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகிறது என குற்றம் சாட்டடப்பட்டுள்ளது.
அரசின் கபடத்தனத்தை உலகிற்கு காட்டுவதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதியை விடாப்பிடியாக பெற்றுக்கொள்வதற்காகவும் மக்களால் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாளில் இருந்து ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்தபடி இருந்ததாகவும் அதையும் மீறி மக்களுக்காக இந்த அலுவலகத்தை திறந்ததாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் கூறுகின்றார்கள்.
பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளார், வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிட்சன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகரதலிங்கம், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள். அல்லது எமது கைகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த அவர்களுக்கு என்ன நடந்தது என்றாவது கூறுங்கள் என்று கண்ணீர் மல்க இதில் கலந்துகொண்ட பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த அலுவலகத்திலிருந்து வெளிமாவட்டங்களில் இயங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அல்லது அமைப்புகளோடு தொடர்பினைப் ஏற்படுத்தி எமக்கான உரிய தீர்வைப் பெற போராடுவோம் எனஅவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment