Header Ads

test

குருநகர் இளைஞர் கொலை வழக்கு - இரு படையினருக்கு மரணதண்டனை


யாழ்ப்பாணம், குறுநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதித்து இன்று (08) திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998/09/10 ஆம் திகதி ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை பயங்கரவாதி என குறிப்பிட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்று இராணுவத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 46 வயதுடைய லெப்டினன் கேர்னல் டோனி பாத்லமியுஸ், 45 வயதுடைய மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் 43 வயதுடைய கேர்னல் பிரியந்த ராஜகருணா என்ற மூன்று இராணுவத்தினரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இதில் இரண்டாவது எதிரியான மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் மூன்றாவது எதிரியான பியந்த ராஜகருணா என்ற இராணுவ வீரர்களுக்கே மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்பினை வழங்கினார்.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் அனுமதியுடன் அனுராதபுரம் நீதிமன்றில் வழக்குகள் இடம்பெற்று வந்தது.

மேலும் மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 25 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதில் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் நபரின் உடலில் 21 இடங்களில் காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து மரணித்ததாக இராணுவ தரப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் இராணுவத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இராணுவ வீரர்கள் மன்றில் வாக்கு மூலம் வழங்கினர்.

இதன் போது குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இராணுவ வீரர்களில் முதலாவது எதிரியான டோனி பாத்லமியூஸ் என்பவருக்கும் கொலைக்கும் தொடர்புகள் இல்லையென தெரிவித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments