Header Ads

test

உரிமை கேட்ட எமக்கு சலுகை தர பேசுகின்றது அரசு!

போர் முடிந்திருக்கிறதே தவிர போராட்டம் இன்னும் முடியவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருக்கின்றோம். எங்கள் சொந்தங்களை இழந்திருக்கின்றோம். எங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றோம். ஆகவே எங்களுடைய போராட்டம் என்பது இப்போது இரட்டிப்பாகியிருக்கின்றது. 

ஒன்று எங்களுடைய இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் மற்றையது எமது உரிமைக்கான போராட்டம். இந்த இரண்டுமே இப்போது இடிபாட்டுக்குள் சிக்கியிருக்கிறது. இப்போது ஒரு புறம் நாங்கள் அரசாங்கத்துடன் எமது உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் அதே வேளை சமாந்தரமாக எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய போராட்டத்திலும் ஈடுபடவேண்டியர்களாக இருக்கின்றோம்.

எங்களை பட்டினி போட்டு இரண்டு கைகளையும் உயர்த்தி தங்களிடம் பிச்சை கேட்க வேண்டும் என்கிற மனோ நிலையிலேயே சிங்கள இனவாதம் செயற்பட்டு வருகின்றது. ஜே.ஆர் ஜெயவர்தனாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூஸ் என்பர் பாராளுமன்றத்தில் பச்சையாகவே பேசினார். தமிர்கள் முழந்தாழிட்டு இரண்டு கைகளையும் உயர்த்தி எங்களிடம் உணவுக்கு பிச்சை கேட்க வேண்டும் என்றார். அதனையே பின்னாளில் மகிந்த அரசு வன்னியில் மக்களை இடம்பெயர வைத்து அவர்களை செட்டிகுளத்தில் கம்பிவேலிக்குள் அடைத்து வைத்து விட்டு பாண் துண்டுகளை வீசி எறிந்தார்கள் எமது மக்கள் அந்த பாண் துண்டுகளை பொறுக்கி எடுப்பதற்கு முண்டியடித்து மிதிபட்டு கையேந்தி நின்றார்காள். ஆகவே சிங்கள இனவாதம் என்பது எங்களை தங்களை நோக்கி கையேந்துபவர்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றது.

போர் நடந்த காலப்பகுதியில் உங்களுக்குத் தெரியும் எமது உரிமை பற்றியே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால் இன்று போர் முடிந்த பிற்பாடு சலுகைகள் பற்றியே ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு என்ன அபிவிருத்தி நடக்கிறது. தமிழர் தாயகப்பகுதிகளில் நாள் தோறும் புத்த விகாரைகளே அமைக்கப்பட்டு வருகின்றது. ஆகவே போர் முடிந்திருந்தாலும் எமது உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த போராட்டத்தை நாங்கள் வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் நாங்கள் அனைவரும் எமது உழைப்பில் சொந்தக்காலில் நிற்கவேண்டுமென சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். 

No comments