மன்னிப்புக் கோரமாட்டாராம் விஜயகலா ?
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன்.
விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டன.
நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நான் கூறிய கருத்தை விலக்கிக் கொண்டு எனது கௌரவத்தையும் மரியாதையையும் இழக்கமாட்டேன்.
விசாரணை அறிக்கை குறித்து நான் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் அதில் ஆர்வம் காட்டுகின்றன.
எனக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனை வரவேற்பேன். அதற்கு அச்சப்படமாட்டேன். என் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
நான் தமிழ் மண்ணில் பிறந்தேன். தெற்கிலுள்ள மக்கள் எங்களுடன் வாழ்ந்திருந்தால், அவர்களும் நான் கூறிய உணர்வுகளையே வெளிப்படுத்தியிருப்பார்கள்.
இன்னும் பல முக்கிய அரசியல்வாதிகள் விசாரணைக்காக வரிசையில் இருக்கிறார்கள்.என்மீதான விசாரணையும் அத்தகைய ஒன்று தான். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தான் நான் வெளிப்படுத்தினேன்.
அப்போது வல்லுறவு, சிறார் வல்லுறவு, போதைப்பொருட்கள், பாலியல் துன்புறுத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை.
ஆனால் இப்போது அதற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். நான் இதனை வெளிப்படுத்தியது மற்றவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தால் அது என்னுடைய தவறு அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment