Header Ads

test

குற்றச்செயல்களை ஆவாவுடன் தொடர்புபடுத்தி தப்பிக்கும் காவல்துறை!

யாழ்.குடாநாட்டினில் அரங்கேறிவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வக்கற்றுள்ள இலங்கை காவல்துறை ஆவா குழுவென அதனை அடையாளப்படுத்தி குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முற்பட்டுள்ளது.ஆவா சேர்ந்த இளையோர்களை அடக்குவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல, அவர்களை அடக்க கூடிய ஆற்றல், அனுபவம் ஆகியன பொலிஸாரிடம் நிச்சயம் உள்ளன, ஆனால் அவர்களுடைய குற்றங்கள் சட்டபடி சிறியவையாக உள்ளன, இதனால் கைதான பின்னர் விரைவாக மீண்டும் வெளியில் வந்து விடுகின்றார்கள்  என்று யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் விஜித குணரட்ண தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவை சேர்ந்த இளையோர்களை அடக்குவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல. அவர்களை அடக்க கூடிய ஆற்றல், அனுபவம் ஆகியன பொலிஸாரிடம் நிச்சயம் உள்ளன. ஆனால் அவர்களுடைய குற்றங்கள் சட்டப்படி சிறியவையாக உள்ளன. இதனால் கைது செய்யப்பட்ட பின்னர் விரைவாக மீண்டும் வெளியில் வந்து விடுகின்றனர். இது ஜனநாயக நாடு. புலிகளால் குற்ற செயல்களுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்கப்பட்டது போல பொலிஸாரால் தண்டனை வழங்க முடியாது. 

ஆவா குழுவை சேர்ந்த இளையோர்கள் நோஞ்சான்களாக உள்ளனர். ஒழுங்காக வாள் பிடிக்கவோ, முறையாக வெட்டவோ உண்மையில் தெரியாத கற்று குட்டிகள். ஆனால் தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து மக்களை பயமுறுத்துகின்றனர். இவர்களின் வாள்வெட்டு தாக்குதல்களில் இது வரை யாருமே மரணிக்கவில்லை. அதே போல யாருமே பாரிய காயம் அடையவில்லை. ஆவா குழுவினர் இது வரை தானியங்கி துப்பாக்கி பயன்படுத்தியதாககூட இல்லை. இதனால்தான் நாம் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றபோதெல்லாம் இவர்களின் குற்றங்கள் சட்டப்படி சிறியவையாக இருப்பதால் விரைவாகவே மீண்டும் வெளியில் வந்து விடுகின்றார்கள்.

ஆவா குழுவின் பழைய தலைவர் சன்னா இந்தியாவுக்கு தப்பி ஓடி சுவிற்சலாந்து போய் உள்ளார். இப்போது ஆவா குழு இரண்டு, மூன்று குழுக்களாக உடைந்து நிற்கின்றது. கடந்த அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்துமே இவர்களுக்கு இடையிலான குழு மோதல்களே ஆகும். ஆவா குழுவை சேர்ந்த யாரும் எமது உறவினர்கள் அல்லர். நாம் வெளியில் இருந்து கடமைக்கு வந்து இருப்பவர்கள். நாம் இங்கு நிரந்தரமாக இருக்க போவதும் இல்லை. நான் கண்டியை சேர்ந்தவன். எனக்கு கண்டியில் எனது மனைவி, மக்களுடன் வாழத்தான் ஆசை. இந்த ஆசை இயல்பானது. இரு வருடங்கள்தான் நாம் பொதுவாக ஒரு இடத்தில் கடமையாற்றுவோம். பிறகு வேறிடத்துக்கு மாற்றமாகி சென்று விடுவோம். ஆகவே எமக்கு இவர்களை தப்ப வைக்க வேண்டிய அவசியம் எதுவுமே கிடையாது. அதே நேரம் நாம் கடமையாற்றுகின்ற இடங்களில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய கடமை பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இல்லையேல் எமது தலைமையகத்துக்கு பதில் கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். எல்லா இடங்களிலுமே குற்ற செயல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் தென்னிலங்கையில் உள்ள இடங்களுடன் ஒப்பிடுகின்றபோது யாழ்ப்பாணத்தில் குற்ற செயல்கள் குறைவாக உள்ளன என்பதே யதார்த்தம் ஆகும். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் முதல் 06 மாதங்களும் 351 குற்ற செயல்கள் பதிவாகி உள்ளன. கல்கிசையில் 900 குற்ற செயல்கள் பதிவாகி உள்ளன. ஆனால் எந்த இடத்திலும் குற்ற செயல்களை பூச்சிய மட்டத்துக்கு கொண்டு வரவே முடியாது. 

சுமார் 200 பெண் பொலிஸாரை யாழ்ப்பாணத்தில் ஆட்சேர்ப்பு செய்ய நாம் விளம்பரம் செய்து இருந்தோம். ஆனால் அதற்கு 12 பேர் மாத்திரமே விண்ணப்பித்தனர். யாழ்ப்பாணத்தாருக்கு பொலிஸ் உத்தியோகம் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. நல்ல பின்புலம் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிற யாழ்ப்பாணத்தார் பொலிஸில் இணைவதில்லை. மேலும் 30 வருட கால யுத்தத்துக்குள் யாழ்ப்பாணம் அழுந்தி கிடந்தது. 

ஆவா குழுவை சேர்ந்த இளையோர்கள் கனவுலகத்தில் வாழ்கின்றனர். மது கலாசாரத்தில் முழுகி உள்ளனர்.புதிதாக மது போதை கலாசாரம் ஒன்று யாழில் உருவாகின்றது. எல்லோருமே 17, 18, 19 வயது உடையவர்கள். இம்முறை க. பொ. த உயர்தரம் எழுதுகின்ற மாணவர்களும் இவர்களில் அடங்குகின்றனர். இக்குழுவில் உள்ளவர்களை எடுத்து கொண்டால் இவர்களுடைய உறவினர்களில் ஒருவராவது புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார். இதனால் இவர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருந்து பணம் நிறையவே வருகின்றது. அதே போல இவர்களை பெற்றோர் சரியாக கண்காணிக்க தவறி விட்டனர். மேலும் இவர்கள் நாட்டின் 30 வருட காலங்கள் யுத்த சூழலில் பிறந்தவர்கள். யுத்த வன்முறைகளின் தாக்கங்கள் இவர்களுக்குள் உள்ளனவென அவர் விளக்கமளித்துள்ளார்.

உண்மையில் வாள் வெட்டு ,கொள்ளைகள நாள்தோறும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.அதனை கட்டுப்படுத்த முடியாது திணறும் இலங்கை காவல்துறை ஆவா குழுவென அடையாளப்படுத்தி தப்பித்துக்கொள்ளவே இத்தகைய கருத்துக்களை முன்வைத்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments