நல்லாட்சிக்கெதிராக போராடமாட்டாராம் சாந்தி!
தாங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்லவெனவும் முல்லைதீவில் சிங்கள மீனவர்களிற்கு எதிரான போராட்டங்கள் நல்லாட்சி அரசிற்கு எதிரானதல்லவெனவும் விளக்கமளித்துள்ளார் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா.
அத்துடன் இந்தப் போராட்டங்கள் தெற்கில் ஒன்றிணைந்த எதிரணி செய்வது போல, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் அல்லவெனவும் அரச அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் மன்றாடியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 அடி விகாரையொன்றையும் விடுதியொன்றையும் அமைப்பதற்கு, தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதென,; சாந்தி சிறீஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளதுடன் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக, தமிழர்களின் பூர்வீகக் காணிகள், தொல்பொருளியல் திணைக்களத்தால் கையகப்படுத்துவதற்கு பல சூழ்சிகள் நடைபெற்று வந்தனவெனவும், அண்மையில் 60 அடி உயரமான விகாரை, ஓய்வு மண்டபங்களை நிர்மாணிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழர்கள், தங்களுடைய சுயநிர்ணய உரிமையுடன், தனது பூர்வீக இடங்களில் வாழ்வதற்காகத் தான், தாங்கள் இன்றும் அரசாங்கத்துடன் ஒத்துப்போய்க் கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே முல்லைத்தீவு கடலில், சனிக்கிழமையன்று (04) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றை, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மறித்துக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனரெனவும், அவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள், திருகோணமலை - விஜிதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளதெனவும், கண்டறியப்பட்டிருந்தது.
இது குறித்து, இலங்கை காவல்துறைக்கு; தெரியப்படுத்தியபோது, "யாரைக் கேட்டு அவர்களைப் பிடித்துள்ளீர்கள்?" என அச்சுறுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட கடற்றொழல் திணைக்கள அதிகாரிகளும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கின்றார்கள் இல்லையெனவும், அவர்களைக் கடற்றொழிலாளர்கள் பிடித்துக்கொண்டுவந்தாலும், அதனை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லையெனவும்; குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நல்லாட்சிக்கு எதிராக தாங்கள் போராடவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர் இலங்கை பிரதமருடன் உறவாடி பெருமளவு அரச காணிகளை சுவீகரித்து தனது மகனின் பெயரில் எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கதே.
Post a Comment