பறிபோகின்றது திருக்கேதீச்சரம் காணி!
மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதி பிரதேச செயலரின் பங்கெடுப்புடன் குறித்த காணிகளை இந்துக்கள் அல்லாத மதத்தினருக்கு திட்டமிட்டு பங்கிட்டு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொள்ள தனது அதிகாரிகளிற்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென, இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேனெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, அவர், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டுக் கால வரலாறு கொண்ட மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார்.
“இதுவே இந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும். இது ஒரு நல்ல நடவடிக்கையாகும். எனவே இதை நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏக மனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.
“இதே அடிப்படையில், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களையும், வட கோடியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் தலத்தையும், புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமென இந்நாட்டில் வாழும் இந்துக்கள் என்னிடம் கோரியுள்ளனர்.
“எனவே, இது இந்து மத விவகாரம் உங்களை சார்ந்த அமைச்சு விவகாரம் என்பதால், இதை உங்கள் கவனத்துக்கு அதிகாரபூர்வமாக கொண்டு வருகிறேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Post a Comment