தொடர்கின்றது முல்லை முற்றுகை போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்துக்கு முரணாக கடல்தொழில் செய்வதையும், வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பதை தடுக்க கோரியும் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கெதிராக அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
தமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான பதிலை முல்லைதீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் கூறவேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த அலுவலகத்தினுள்; ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பெரும் பதற்றம் ஏற்படடிருந்தது.
இதனையடுத்து சிறீலங்கா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் குவிக்கப்பட்டனர்.காவல்துறையினரும் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடியதுடன் மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் 8ம் திகதி இலங்கை மீன்பிடி அமைச்சருடன் நடைபெறவுள்ள சந்திப்பில் தீர்க்கமான பதிலொன்றை எதிர்பார்த்தே தொடர்முற்றுகைப்போராட்டத்தில் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் குதித்துள்ளனர்.
அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல தரப்புக்களும் அங்கு விஜயம் செய்துவருகின்றன.
முல்லைதீவு முதல் மணலாறின் முகத்துவாரம் வரையிலான கடற்கரைகளை தாரைவார்த்து வருமானம் பார்ப்பதில் முன்னணியில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளே முன்னின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment