வடக்கில் காணி விடுவிப்பு முட்டாள்தனமானது - சரத் பொன்சேகா ஆவேசம்
வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இராணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும், வடக்கில் இருக்கக் கூடாது என்று உங்களால் கூறமுடியாது. இராணுவத்தின் பருமனைக் குறைக்க வேண்டிய தேவை இல்லை என்பதே எனது கருத்து.
எனது தனிப்பட்ட கருத்தின்படி, இராணுவத்தின் குறைந்தபட்ச பலம், 150,000 இற்கு மேல் இருக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைக்காக மாத்திரமல்ல, வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளிட்ட எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்வதற்கும் நாட்டின் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. அவர்கள் 3 மில்லியன் பேரைக் கொண்ட இராணுவப் படையை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனும், போரிடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் அணிதிரட்டப்படவில்லை.
வடக்கில் சில பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்றக் கூடாது.
பொதுமக்களின் காணிகளை திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடி, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் அளவைக் குறைப்பது பற்றி இராணுவத் தளபதி பெருமையாகப் பேசியதைக் கேள்விப்பட்டேன். இது முட்டாள்தனமானது.
ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களுக்கு மீள வழங்குவதற்காக, முகாம்களை மூடுவதையிட்டு பெருமைப்பட முடியாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் கருத்தை கேட்க வேண்டும். சரியான மதிப்பீட்டை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment