Header Ads

test

தென்னிலங்கை மீனவர்களை எதிர்ப்பது இனவாதமாம்?

தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலிற்கு எதிராக முல்லைதீவு ,மன்னார்,வடமராட்சி கிழக்கென போராட்டம் முனைப்பு பெற்றுள்ள நிலையில்  வடக்கிலிருந்து மீனவர்கள் தெற்கிற்கு போவதற்கும், தெற்கிலிருந்து மீனவர்கள் வடக்கிற்கு வருவதற்கும் இந்த நாட்டில் உரிமை உள்ளதாக ஜே.வி.பி.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் ஹலப்பதி கூறியுள்ளார். 

நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற வடக்கு மீனவர்கள் பிரச்சினை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறியதாவது, நாங்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள். சட்டவிரோதமான தொழிலை செய்பவர்கள் எந்த இனம் சார்ந்தவராக இருந்தாலும் பிழையானதே. ஆனால் பருவகால கடற்றொழிலுக்காக தெற்கில் இருந்து வடக்கிற்கு மீனவர்கள் வருவதும், வடக்கிலிருந்து தெற்கிற்கு மீனவர்கள் செல்வதும் வழமை. இந்த நாட்டில் அதற்கு உரிமை உள்ளது. அதனை கடந்தகால அரசியல் தலைமைகள் சரியாக விளங்கிக் கொள்ளாமையினாலேயே இன்று இந்த பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

இதனை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலாநந்தன், சிவநேசன் போன்றவர்களும், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றவர்களும் இனவாதமாக பார்த்தால், அல்லது இனவாதத்திற்காக பயன்படுத்தினால் அதனை நாங்கள் ஏற்கப்போவதில்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தெற்கு கடலை சூறையாடிய பின்னரே வடக்கு கடலிற்கு சிங்கள மீனவர்கள் வருகை தந்துள்ளதாக உள்ளுர் மீனவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.அத்துடன் தடை செய்யப்பட்ட முறைமைகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments