சிவகுமாரனின் தூபி அரச செலவிலாம்:கண்டறிந்த மஹிந்த அணி!
விடுதலைப்போராட்டத்தில் முதலாவதாக சயனைட் குப்பியைக்கடித்த தியாகி சிவகுமாரனிற்கு அரசாங்கத்தின் செலவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளார் மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன.
இராணுவத் தளபதியின் தீர்மானத்துக்கமையவே, படைகளில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பதவி நிலைகள் உள்ளன. அவை எச்சந்தர்ப்பத்திலும் குறைக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர், வடகிழக்கிலுள்ள முகாம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. எமக்கு முகாம்களின் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துங்கள். அதற்கேற்ப நாம் செயற்படுவோம் என்றார். இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுந்த சர்ச்சையையடுத்து பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படைகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழமையானதொரு விடயமாகும். அதற்கேற்பவே, தற்போதும் படையினர் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நானும் ஜனாதிபதியும் தலையிடுவதில்லை என்றார்.
இதனிடையே சிறிசேன, விக்கிரமசிங்க அரசாங்கம், ஜெனீவாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இராணுவத்தினரைப் பழிவாங்கி வருவதாக குற்றஞ்சாட்டிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,இராணுவ வெற்றியை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது என்றார்.
வடக்கில் இராணுவ முகாம்களை நீக்குவதும் படையினரின் எண்ணிக்கையை 25 சதவீதமாகக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 33 படையணிகள் நீக்கவும் 9,038 பதவிநிலை அதிகாரிகளையும் 23 ஆயிரம் படையினரையும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சுமார் 150 முகாம்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
வடக்கில், பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது. முதலாவதாக சைனட் குப்பியைக் கடித்தவருக்கு அரசாங்கத்தின் செலவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. வடக்கில், இராணுவத்துக்குச் சொந்தமான 84 ஆயிரம் ஏக்கர் காணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மீண்டும் புலிகள் உருவாக வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கூறுகிறார். அவையெல்லாம் எதற்காகச் செய்யப்படுகின்றது.
“நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இராணுவத்தினருக்குப் பதவியுயர்வு இல்லை. வெளிநாட்டுப் பயிற்சிகள் கூட இல்லை. மாறாக பழிவாங்களுக்கு மட்டுமே ஆளாக்கப்படுகின்றனர். எனவே, வடக்கில் முகாம்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தமுடியுமா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
Post a Comment