சம்பந்தனிற்கு கைகொடுத்த மனோ?
புதிய அரசியலமைப்பு ஊடாக, தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க் கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினருக்கு உரிமை இருக்கிறது. எனினும் அதனை யாருக்கு வழங்குவது என்பதை சபாநாயகர் கருஜயசூரியவே தீர்மானிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுர்க்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒன்றிணைந்த எதிரணி என்பது பதிவு செய்யப்பட்ட கட்சியல்ல. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஒன்றிணைந்த எதிரணியில் இல்லை. ஆகவே அவர்களுக்கு எதிர்க் கட்சி தலைவர் பதவி வழங்க முடியாது. வேண்டும் என்றால் நீதிமன்றத்துக்கு செல்லட்டும்.
ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றனர். தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இவர்கள் ஒருபோதும் உதவுவது கிடையாது.
ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், தினேஷ் குணவர்தன எம்.பியை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும்படி சிலர் அலுத்தம் கொடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment