கொள்ளையர்கள் கண்களை கொத்தினர்:பார்வை போன அவலம்!
யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஊடகங்கள் பிரச்சாரங்களை செய்வதாக இலங்கை காவல்துறை சப்பைகட்டு கட்டி வருகின்றது.இந்நிலையில் உடுப்பிட்டி பகுதியில் வயோதிப குடும்பம் மீது கொள்ளையர்கள் நடத்திய வாள் வெட்டினால் இரு பார்வையினையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வயோதிப பெண்மணி கொள்ளையர்களை அடையாளம் கண்டிருந்த நிலையில் அவரது இருகண்களையும் கூரிய ஆயுதங்களால் கொத்தியதால் அவர் பார்வையினை இழந்துள்ளதுடன் தொடர்ந்தும் உயிருக்கு போராடிவருகின்றார்.
கொள்ளையர்கள் வாள்வெட்டினில் வயோதிப தம்பதிகளை தாக்கி படுகாயப்படுத்தியிருந்த நிலையில் காலை வரை இரத்தம் பெருக்கோட அவர்கள் மயக்க நிலையிலிருந்துள்ளனர்.அப்போது பூக்கள் சேகரிக்க வந்த அயலவர் ஒருவரே அவர்களை மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே வல்வெட்டித்துறை காவல்நிலைய முகவர்களாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பத்திரிகை தரகர்கள் கைத்தொலைபேசி திருட்டென சம்பவத்தை புரட்டிப்போட்டுள்ளதாக மக்கள் சீற்றமடைந்துள்ளனர்.
இதனிடையே அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்று (12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி - யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துமுள்ளனர்.
Post a Comment