இராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி!
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜெனீவா சென்று திரும்பிய பின்னரே மைத்திரி சிந்திக்க இருப்பதாக சம்பந்தருக்கு கூறியுள்ளாராம்.அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் மைத்திரியுடன் சம்பந்தர் பேசிய போதே 27ம் திகதி வரை மைத்திரி காலக்கெடு விதித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே நல்லாட்சி அரசாங்கத்தை சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் காப்பாற்றி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
போர் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒரு சிறு துளி கூட போராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மேற்கொள்ளவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து 8 ஆம் நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை காப்பாற்ற முயலும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென சாடினார்.
Post a Comment