சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்
பத்து மாதம் அன்னையவள் பத்திரமாய் சுமந்து உன்னை நிலத்தில் பெற்றெடுத்தாள் -சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்
பத்து மாதம் சுமந்தவள் இன்று நிலத்தில் இருந்திருந்தால் -உன் ஒட்டிய வயிறு கண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பாள்
திலீபன் அண்ணா!
உங்களுக்கு பசியால் பார்வை மங்குவது தெரிகிறது
இங்கிருக்கும் மக்கள் கூட மங்கலாக தெரிகிறது.
ஆனால் தமிழீழம் மட்டும் தெளிவாக தெரிகிறது .
குழிவிழுந்த கன்னங்கண்டு-இங்கு குளமாகும் கண்கள் எத்தனை, எத்தனை!
அண்ணா!
உண்ணாமல் இருக்கும் உங்களால் எப்படி சிரிக்க முடியும்
எனக்கு தெரியும் நீங்கள் சாகும் போதும் சிரித்துக்கொண்டே சாவீர்கள்.
ஏனென்றால் நாங்கள் அழக்கூடாது என்பதற்காக.
எப்படி அண்ணா அழாமல் இருக்க முடியும்?
உங்கள் ஒட்டிய வயிறும், குழிவிழுந்த கண்களும் குற்றுயிராய் கிடக்கும் நிலையும் கண்டால், கல்நெஞ்சமும் கசிந்து கண்ணீர் விடும்
உங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள்
அவர்கள் ஆசைப்படுவதெல்லாம் மெயின் மெயின் திலீபன் அல்பேட் அல்பேட் திலீபன் மில்லர் மில்லர் திலீபன் என நீங்கள் வோக்கியில் பேசுவதை தான்
.தயவுசெய்து ஒரேயொரு முறை இறுதியாக அவர்களுக்கு பேசிக்காட்டுங்கள்
அன்று செந்நிற சேலை கட்டி செங்குருதியில் பொட்டும்இட்டு பாதயாத்திரைக்கு அனுப்பி வைத்தார்களே, அவர்களுக்கும் பேசிக்காட்டுங்கள்
மௌனமாய் அழைக்கும் மரணித்த நண்பர்களிடம் போகபோகிறேன் என மக்களிடம் சொல்கிறீர்களே; இங்கு வருந்தி அழைத்து வாடிக்கிடக்கிறார்களே உங்கள் குழந்தைகள். அவர்களுடன் ஏன் வாழக்கூடாதா அண்ணா!
உங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள் எங்கே நீங்கள் எங்களை விட்டு போய்விடுவீர்களோ என்று
தலையிலிருந்து கால் வரை உங்களை தடவிக்கொண்டிருக்கும் காட்சி கண்டு இங்கே இரத்த கண்ணீர் வடிக்கிறோம்
அண்ணா
நான் நினைக்கவேயில்லை
உயிரோடு உங்களுக்கு என் கையால் கவி எழுதி அதை உங்கள் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று.
தமிழீழத்தில் கொண்ட உறுதியால் இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்
-ஆனால் உங்கள் மீது கொண்ட பாசத்தால் இங்கே எத்தனை தாய்மார்கள் தள்ளாடி விழுகின்றனர்
அண்ணா!
எவ்வளவு தைரியம் இருந்தால் மகாத்மா விற்கே சவால் விடுவீர்கள்.
அவர் கூட நீர் அருந்தி நீண்ட நாட்கள் நினைவோடு இருந்தாரே
நீங்கள் ஏன் அண்ணா நீர் அருந்தக்கூடாது
எனக்கு தெரியும் நீங்கள் அருந்த மாட்டீர்கள்
தமிழீழ தாகத்திற்கு தண்ணீர் அருந்தமாட்டீர்கள்
உங்களின் இறுதி மூச்சை இழுத்து பிடித்திருக்கிறீர்கள், ஆனால் இங்கே உயிர் கொடுத்தவனை விட உணவு கொடுத்தவன் உயர்வாக மதிக்கப்படுகிறான்
பிரச்சனைக்குமேல் பிரச்சனை வந்ததால் எம்மக்களிற்கு அடிப்படை பிரச்சனை அறவே மறந்து விட்டது
இன்று இவர்கள் பிரச்சனை என்று பிரகடணப்படுத்துவது எல்லாம் ஆமியின் வருகையும் அவசரகாலசட்டமும் பொருளாதார தடையுமே.
இன்று இவைகள் எடுபடலாம்
நாளை, கல்வியில் சமவுரிமை, பல்கலைக்கழக புகுவுரிமை, கிழக்கில் குடியுரிமை, மலையக மக்களின் பிரஜாவுரிமை இல்லை என்பதை இவர்கள் உணர்வார்கள் ;
அப்போது அறிவார்கள் அடிமைச்சாசனம் இன்னமும் அழித்தெழுதப்படவில்லையென்று .
பாரதமே!
அன்று விடுதலையின் வரைவிலக்கணத்தை விளங்கப்படுத்தியவன் நீ
நீ பணத்துக்காக பறிப்பித்திருக்கலாம்-நாங்கள் நடைமுறையில் வாழத்துடித்தவர்கள்
இந்தியாவே!
உன் வருகையால் மறைந்த தேவரின் கல்லறைகள் மறைவில் ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது
உருவாகிய ஒப்பந்தங்களால் உண்ணாவிரதங்களே அதிகரித்தன
இந்திய இராணுவமே !
எம் தேசத்து தெருக்களில் பேய்களாய் திரியும் உன்னை -இன்று தெருவிளக்காய் எம்மவர் நோக்கலாம்
உன் சுயரூபம் நிச்சயம் அம்பலமாகும்
அப்போது உண்மையான தெருவிளக்குகளை தேடி அவர்களே வருவார்கள்
எம்மவர்களை காக்க எம்மால் விரட்டி அடிக்கப்பட்ட விசப்பாம்புகள் இன்று உன் வருகையால் இங்கே வரவழைக்கட்டுள்ளனர்
விரட்டி அடித்த போது விசம் என ஏற்றுக்கொள்ளாதவர்கள் கடித்து பின்னராவது கருத்து தெரிவிக்கட்டும்
இந்தியாவே!
எமக்கு தேவை எலெக்சன் அல்ல.
இணைப்பு எலெக்சன் வைக்க வேண்டியது உங்கள் காஷ்மீரில்.
இணைக்க வேண்டியது வடக்கு -கிழக்கு.
காஷ்மீரை கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு இலங்கையில் எலெக்சன் நடத்தும் உனக்கு நோபல் பரிசு ஒரு கேடா.
பாரதமே!
மகாத்மாக்கள் உங்கள் தேசத்தில் மட்டும் அல்ல எங்கள் தேசத்திலும் மலர்வார்கள்
அகிம்சையை பிரசவித்த உங்கள் தேசம் ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அவர் விரும்பமாட்டார்
அகிம்சை யை மறந்து ஆக்கிரமிப்பு செய்த உங்களை அகிம்சை யால் விரட்டி அடிக்க அவர் எங்களோடு இணைவார்
இதோ;
இப்போதே இங்கேயொரு மகாத்மா மரணத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறான்
இவன் மரணம் நிச்சயமானால் நாம் இங்கே இன்னொரு மாநாடு கூட்ட போவதில்லை.
மக்கள் புரட்சி வெடிக்கும்;
அப்போது வல்லரசுகள் வழிவிடும்
இலங்கையரசு இரண்டாகப்பிரியும் –
தமிழருக்கொரு தனியரசு உருவாகும்
ராஜீவ்காந்தியே!
உங்களுக்கோர் தாழ்வான வேண்டுகோள். ……..
உங்கள் அகராதியில் அகிம்சை யை அழித்துவிட்டு ஆக்கிரமிப்பு என எழுதுங்கள்.
மக்கள் புரட்சி வெடிக்காதோ என்று மனந்தளராதே மாவீரனே!
இதோ நீ உயிரோடு இருக்கையிலேயே இங்கேயொரு மக்கள் புரட்சி வெடித்து விட்டது;
உன் கோரிக்கைகளை அங்கீகரித்து உன்னோடு இருவர் இப்போதே இணைந்து விட்டனர்.
திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்தபோது மேஜர் கஸ்தூரியினால் மேடையில் வாசிக்கப்பட்ட
கவிதை
(11.07.1991 ஆனையிறவு படைத்தளம் மீதான முற்றுகை சண்டையில் படைத்தளத்தின் ஒரு பகுதியான தடைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்)
Post a Comment