மேலுமிருவர் வைத்தியசாலையில்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலுமிரு அரசியல் கைதிகளது உடல்நிலை பாதிக்கபட்டுள்ள நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.ஏற்கனவே இருவர் அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இப்போது மேலுமிருவர் சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.
ராசபல்லவன் தபோரூபன் , சூரியகாந்தி ஜெயச்சந்திரன் , தங்கவேல் நிமலன் , சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் , மதியரசன் சுலக்சன் , இராசதுரை திருவருள் , சிவசுப்பிரமணியம் சிவசீலன் , இராசதுரை ஜெகன் ஆகிய எட்டு சிறைக்கைதிகளையும் இன்றையதினம் நானும் சிவன் அறக்கட்டளை இணைப்பாளர் சதீஸ் அவர்களும் சென்று பார்வையிட்டிருந்தோம். இவர்களது வழக்குகள் ஒழுங்கான தவணையில் முறையாக இடம்பெறாது தவணைக்காலம் குறிப்பிடப்பட்டு பின்தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமது வழக்குகளை சரியான முறையில் விசாரித்து எங்களை விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியும் இடம்பெறவில்லை. மாறாக காலம் தாழ்த்தும் நடவடிக்கையே இடம்பெறுகிறது. இக்கோரிக்கை பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்பொழுது உடல் நிலை முற்றிலும் செயலிழந்த நிலையில் ராசபல்லவன் தபோரூபன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் தங்கவேல் நிமலன் மற்றும் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று மாலை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.
அவர்களை பார்வையிடுவதற்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தோம். அங்கு அவர்களை சந்தித்து உரையாடிய போது சூ.ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் கொஞ்சம் குணமடைந்து வந்துள்ளார். தற்போதைய உடல்நிலையில் மீளவும் பக்கவாத நோய் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் வேதனையுடன் எமக்கு தெரியப்படுத்தினார். ரா.தபோரூபன் அவர்களுக்கு உடலில் குளுக்கோசின் அளவு 45 ஆக காணப்பட்டு நினைவிழந்த நிலையிலேயே அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள். அவரும் அபாய கட்டத்தில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் கடந்த 09 வருடங்களாக எந்தவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்குகளை மேற்கொண்டு விடுதலை செய்வது தொடர்பில் எந்த ஏற்பாகளும் இல்லை. இதுநாள் வரை உறவுகளை பிரிந்து உடல் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகி தமது வாழ்வை அநியாயமாக இழந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் சரியான தீர்ப்பு கிடைத்து விடுதலை பெற அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்து கொண்டேன்.
கடந்த சில மாதங்களிற்கு முன்னர் மதியரசன் சுலக்சன் இராசதுரை திருவருள் ஆகியோரது வழக்குகள் வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றிக்கு மாற்றியதை எதிர்த்து மேன்முறையீடு செய்து அவர்களுக்கு நாம் தீர்வினை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment