ஆட்கடத்தலை தடுக்க ஆஸ்திரேலிய- மலேசிய படைகள் கூட்டு ரோந்து
கடல் வழியாக நிகழும் ஆட்கடத்தல், மனித கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய எல்லைப்படையும் மலேசிய கடலோர காவல்படையும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கையினை நடத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 24 அன்று தொடங்கிய ரெட்பேக் 11 எனும் இந்த ரோந்து நடவடிக்கை நேற்று (செப்டம்பர் 28) நிறைவடைந்துள்ளது. இந்நடவடிக்கையில், இரு நாட்டு படைகளும் தங்களுக்கு இடையேயான அனுபவங்களை, திறன்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்நடவடிக்கை தொடர்பாக பேசியிருந்த ஆஸ்திரேலிய எல்லைப்படையின் மண்டல இயக்குனரும் தளபதியுமான கிறீஸ் வாட்டர்ஸ், “கடலில் நடக்கும் பன்னாட்டு குற்றங்களான ஆட்கடத்தல், மனித கடத்தல், போதைமருந்து கடத்தல், கொள்ளை உள்ளிட்டவை மண்டல ரீதியான நெருங்கிய ஒத்துழைப்பை வலியுறுத்துகின்றது” எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், இவ்வாறான குற்றங்களை தடுக்க தொழில்நுட்ப ரீதியாகவும் ஒருங்கிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம், மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக டேங்கர் கப்பல் மூலம் 131 இலங்கையர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு செல்ல முயன்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி செல்ல முயன்றவர்களும் இக்கடத்தலில் ஈடுபட்டவர்களும் அப்போது கூண்டோடு கைது செய்யப்பட்டிர்நுதனர். அந்நிகழ்வு குறித்து பேசியிருந்த மலேசிய காவல்துறை தலைவர் முகமது பூஸி ஹரூன், “கடந்த 2017ம் ஆண்டு மத்தியிலிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா என பல நாடுகளில் தொடர்புகளை ஏற்படுத்தி ஆட்கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. தற்போது நடந்த மூலமாக மிகப்பெரிய தந்திரமான ஆட்கடத்தல் கும்பலை வெற்றிக்கரமாக மடக்கி பிடித்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, ரெட்பேக் போன்ற ரோந்து நடவடிக்கையில் ஆஸ்திரேலியா- மலேசியா படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
Post a Comment