தாயகம் திரும்பும் ஏதிலிகளை இந்தியர்களாம்?
இந்தியப் பிரஜைகளை குடியேற்றப்படுவதான பிரச்சாரங்கள் ஊடாக இந்தியாவிலிருந்து அகதிகள் மீள தாயகம் திரும்புவதை தடுக்க தெற்கு தயாராகிவருகின்றது. வடக்கில் 250 இந்தியக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக தற்போது புதிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண அரசியல்வாதிகள், நெடுங்கேணி பகுதியில் 250 இந்தியக் குடும்பங்களை குடியமர்த்தியுள்ளனர் என விமல்வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இவ்வாறு இந்தியர்கள் சிலர் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என, குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் பிரச்சினை நிகழ்ந்த காலகட்டத்தில், நாட்டைவிட்டு இடம்பெயர்ந்து, இந்தியாவுக்குச் சென்று தஞ்சமடைந்த, 10,675 இலங்கைப் பிரஜைகள், யுத்தம் நிறைவுப்பெற்றதன் பின்னர், சுயவிருப்பிற்கமைய இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும், இலங்கைப் பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எந்தவொரு பகுதியிலும், வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் குடியமர்த்தப்படவில்லையென, அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்தியப் பிரஜைகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என, வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இத்தகைய பிரச்சாரங்கள் தாயகத்திற்கு திரும்ப முற்படும் தமிழகத்திலுள்ள ஏதிலிகளிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் முயற்சியென தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment