சீனாவுடன் கூட்டு; எச்சரிக்கிறார் இந்திய தளபதி?
சீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் இந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பிபின் ராவத்.
இந்தியாவின் அண்டை நாடுகள் அண்மையில் சீனாவுடனான உறவுகளை வளர்த்துக் கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவியியல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிம்ஸ்ரெக் அமைப்பு நாடுகளின் இராணுவத்தினர் பங்கேற்ற, ஒரு வார கால, ‘Military Exercise 18’ கூட்டுப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் உரையாற்றிய போதே இந்திய இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.
புனேயில் உள்ள Aundh இராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சுபாஸ் பாம்ரேயும் கலந்து கொண்டார்.
“அவர்களிடம் ( சீனா) நிதி வாங்கியவர்களின் மனதில், ஒன்றும் இலவசம் அல்ல என்று மனதில் எச்சரிக்கை உள்ளது.
இந்தியாவின் பிரதான பொருளாதாரப் போட்டியாளராக சீனா உள்ளது. இரண்டு நாடுகளும், தெற்காசியாவின் ஆதிக்கத்துக்காக போட்டியிடுகின்றன.
புவியியல் இந்தியாவை நோக்கிச் சாய்வதை விரும்புகிறது. சீனாவுடனான கூட்டணி கரிசனைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அது தற்காலிகமானது.
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையிலான உறவு, இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அது 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று இல்லை.” என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே, பிம்ஸ்ரெக் பிராந்தியத்தில், தீவிரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிம்ஸ்ரெக் அமைப்பில் அங்கம் வகிக்கும், இந்தியா, இலங்கை, மியான்மார், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளின் தலா 30 இராணுவத்தினர் இந்த கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்றனர்.
நேபாளம் கடைசி நேரத்தில் இந்தக் கூட்டுப் பயிற்சியில் இருந்து விலகியது. தாய்லாந்து கண்காணிப்பாளர்களை மாத்திரம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment