Header Ads

test

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை


சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என, தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார், சிறிலங்காவின் நீதியமைச்சர் தலதா அத்துகோரள.

கண்டியில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போன்று, அரசியல் கைதிகள் என்று யாரும் சிறைச்சாலைகளில் இல்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டவர்களும் நீதிமன்ற விசாரணையில் இருப்பவர்களும் விசாரணைக்காக காத்திருப்பவர்களும் தான் சிறைகளில் உள்ளனர்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நடத்திய சந்திப்பின் போது, இதனை நான் தெளிவாக எடுத்துக் கூறினேன்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் மனக்குறைகளைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை எனத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments