முடிவுக்கு வந்தது கொழும்பு நாடகம்! ரணில் பிரதமரானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மீண்டும் பிரதமராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.16க்கு இடம்பெற்றது.
இந்த சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. தேசிய அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டிருந்தார். இந்த பின்னணியில் நாட்டில் அரசியல் குழப்பகர நிலைமை ஏற்பட்டிருந்த பின்னணியில், மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை நேற்றைய தினம் இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment