Header Ads

test

இலங்கை நீதித்துறையின் புகழ்பாடும் சம்பந்தன் சர்வதேச விசாரணையை எப்படி கோருவார் ?

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது என்றும் அது அரசியல் சதி முயற்சிகளில் இருந்து நாட்டினைக் காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என்றும் தனது வாயால் புகழாரம் சூட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எந்த முகத்துடன் சென்று இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என கோரப்போகிறார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமைதத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

நேற்று நாடாளுமன்றில் பேசிய பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க இலங்கையில் கடந்த 50 நாட்களாக நடந்த அரசியல் குழப்பத்தினையடுத்து நீதிமன்றத்தை அணுகிய பொழுது உயர் நீதிமன்றம் நடந்து கொண்ட விதம் இலங்கை தன்னுடைய நீதித்துறையின் நம்பகத் தன்மையை நிரூபித்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச பங்களிப்பு அல்லது ஒரு கலப்பு பொறிமுறை அவசியம் இல்லை என்றும் இலங்கையில் இருக்கக்கூடிய நீதிமன்றங்களை அவ்வாறான விசாரணைகளை நடத்துவதற்கு தகுதி கொண்டுள்ளது எனவும் அவர் நாடாளுமன்றில் கூறியிருக்கிறார்.

இந்த ஜேவிபி போர்க்காலத்தில் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து போர்க்குற்றங்களை நியாயப்படுத்திய ஒரு தரப்பு ஆகும். அவர்கள் அந்தக் கருத்தைக் கூறுவது சிங்கள இனவாதத்தை வழிப்படுத்துகின்ற கருத்தாகவே கொள்ளலாம்.

மார்ச் மாதம் வரப்போகின்ற ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் அரங்கில் இலங்கை அரசாங்கமானது இலங்கை நீதிமன்றங்கள் நடந்துகொண்ட விதத்தை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்கூறி ஐக்கிய நாடுகள் சபையில் இனியாவது சர்வதேச விசாரணைகள் நடைபெறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளனர்.

இதனைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் தான் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதற்கு பிற்பாடு ஊடகங்களுக்கு பேசிய பொழுது மக்களுடைய பிரதிநிதி எனும் வகையில் ஸ்ரீலங்காவின் நீதித்துறையின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தன்னுடைய நடுநிலைமையை ஸ்ரீலங்காவின் நீதித்துறை நிரூபித்து நிரூபித்து இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கூறிவிட்டு அவர் எவ்வாறு சர்வதேச விசாரணையை அவர்களிடம் வலியுறுத்தப் போகின்றார்.

நாங்கள் 2010லிருந்து பொதுமக்களுக்கு கூறி வருகிறோம் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் எமது தீர்வு முடக்கப்படுவது மட்டுமல்லாது பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக விசாரணைக்குள்ளேயே முடக்கப்பட்டு விடும் என கூறி வருகிறோம்.

ஒரு இன அழிப்புக்கு உள்ளான மக்கள் எடுத்த எடுப்பில் பொறுப்புக்கூறலை சர்வதேச விசாரணைகளை கைவிடமுடியாது அந்த மக்களை படிப்படியாக பொறுப்புக்கூறல் உணர்வுகளை மறைத்து அந்த மக்களே அவற்றை மறந்து போகும் அளவிற்கு இவர்கள் செய்வார்கள் எனவும் நாம் சுட்டிக் காட்டி வந்திருந்தோம் இன்று அது கண்ணுக்கு முன்னால் நடைபெறும் ஒரு விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரங்கேற்றி வருகிறது.

அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது நொந்துபோய் இருக்கின்ற மக்கள் கடந்த 9 வருடமாக அடிப்படையில் எதுவித முன்னேற்றமும் காணாத நிலையில் இந்த நிலைப்பாடுகளுடன்  உறுதியாக இருக்க மாட்டார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளார். இதன் வெளிப்பாடாகவே தற்போது சர்வதேச விசாரணை தேவையில்லை உள்ளக விசாரணையையே நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்திருக்கிறது - என்றார்.

No comments