Header Ads

test

ஒருபுறம் வேடன்! மறுபுறம் நாகம்! இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்

இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இத்தேர்தலில் மைத்திரியின் முகவராக செயற்படவென நியமிக்கப்பட்ட ஆளுனர் ராகவன் தமது செயற்பாடுகளை அத்திசை நோக்கி ஆரம்பித்துள்ளார். இருவரும் ஏட்டிக்குப் போட்டியாக நாளொரு வண்ணம் விடும் அறிக்கைகளும், மலர்மாலை மேளவாத்திய ஊர்வலங்களும் வடக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. 

இலங்கைத் தமிழரின் அரசியல் போராட்டம், அரசியல் தீர்வு முயற்சி, அரசியல் விடிவுக்கான செயற்பாடு என்பவை எத்திசை நோக்கி இப்போது செல்கின்றன என்ற கேள்வி கடந்த சில நாட்களாக மேலோங்கி வருகிறது.

தமிழ் மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்கள், பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், தீர்வை நோக்கி காய்களை நகர்த்துபவர்கள் இப்போது யார்?

தாம் சார்ந்த சமூகம், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் இனம், தாம் சார்ந்த அரசியல் கட்சி என்பவற்றைவிட யாரோ ஒருவருக்காக அவர்களின் இயந்திரத்தின் சக்கரமாக சிலர் செயற்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக பொன்னாடைகள் (பன்னாடைகள்), மலர்மாலைகள், சந்தன மாலைகள், மேளதாள வாத்திய சமேத ஊர்வலங்கள் என்ற முன்னைய அரசியல் கலாசாரம் மீண்டும் மெதுமெதுவாக தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களையும், விளையாட்டு மைதானங்களையும், வெள்ளம் வழிந்த திடல்களையும் மையப்படுத்தி ஒளிப்பட பரப்பரைகள் ஒருபுறம். தங்களுக்குத் தாங்களே கூட்டங்களை ஏற்பாடு செய்து அட்டகாச அறிவிப்புகளை வெளிப்படுத்துவது இன்னொருபுறம். விரைவில் தேர்தல்கள் வரப்போகின்றன என்பதை வடக்கு மக்கள் அறிய ஆரம்பித்து விட்டனர்.

இந்தத் திருவிளையாடல்களுக்கு மத்தியில் சில ஊடகங்கள் அகப்பட்டு நெரிபடுவதையும் காண முடிகிறது. இந்த வகையில், வடக்கில் பவனி வரும் இரண்டு பிரதானிகளை இங்கு அலச வேண்டியுள்ளது.

ஒருவர், வடமாகாண ஆளுனராக இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன். அடுத்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாமாகத் தம்மை முன்னிலைப்படுத்தி வரும் சுமந்திரன் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர்.

ஆளுனர் ராகவன் இதுகாலம்வரை இலங்கை அரசியலில் அறியப்படாத பேசப்படாத ஒருவர். அதனாற்தான் போலும் இதுவரை இலங்கையின் அரசியல் விவகாரங்கள் பற்றி வாயே திறக்கவில்லை. அதற்காக அவர் இனியும் அவ்வாறு இருப்பாரென நிச்சயமாகச் சொல்ல முடியாது.

வீழ்ந்திருக்கும் தேசத்தைக் கட்டியெழுப்புவதோடு, வடமாகாணத்தை முன்னேற்றமடைய பாடுபடுவேனென அறிவித்துள்ளார்.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாலக் கட்டுமானத்தின் ஓர் அணிலாகவேனும் செயற்பட விரும்புகிறாராம்.

ஒப்பந்தம் செய்யக்கூடிய ஆளுமை, சட்டத்தின் ஆட்சியிருத்தல், சுதந்திரத்துக்கான தாகமும் அதற்கான தேவையும் ஜனநாயகத்தின் (?) முக்கியமெனவும் கூறியுள்ளார்.

யுத்தம் முடிவுற்று பத்து வருடங்களாகியும் வடக்கு மாகாணத்தில் தமிழ் மொழிக்குரிய இடம் இன்னும் கிடைக்கவில்லையென்றும் அழுகிறார் (தமிழரசுக்கட்சி எம்.பியாகவிருந்த கா.பொ. இரத்தினம், அப்போது ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும், பேருந்துகளிலும், வீதிப்பலகைகளிலும், தபால் நிலையங்களிலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக கூறி வந்ததுமே இங்கு ஞாபகம் வருகிறது).

மேற்சொன்ன கருத்துகள் ஆளுனர் ராகவனால் அவரது பதவியேற்பின்போது கூறப்பட்டவைகளில் சில.

அன்றிலிருந்து இன்றுவரை பத்திரிகைகளின் முன்பக்கத்தை தமது அதிரடி அறிவிப்புகளால் அலங்கரித்து வருகிறார் இவர்.

தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டுமென்ற இவரது அறிவிப்பு, சிங்கள தேசத்தை சிலிர்த்தெழ வைத்துள்ளது.

இது தொடர்பாக மகாசங்கத்துடன் பேசுவேன் என்ற இவரது ஒரு வசனம், பௌத்த மயமாக்கலை இவரால் ஒன்றும் செய்ய முடியாதென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை குன்றியுள்ளது, தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாதிருப்பதே அவர்களின் கடந்தகால தோல்விக்குக் காரணமென்று கூறியவையும், வெள்ளம் பெருக்கெடுத்த இரணைமடு செயற்பாட்டுக்கு விசாரணைக் குழுவை நியமித்ததும், பொங்கல் நாளன்று தம் விருப்பப்படி வடபகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியதும் போன்று இவர் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகளால் பலரும் வியப்படைந்துள்ளனர்.

சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியால்கூட செய்ய முடியாதவைகளை ஆளுனர் ராகவன் செய்து விடுவாரோ?

ராகவனின் நியமனம் அரசாங்கத்தின் தெரிவன்று. நேரடியாக ஜனாதிபதியின் தெரிவு. எனவே இவரை பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு என்றும் பார்க்கலாம்.

திடுதிப்பென ஆளுனர் கதிரையில் ஏற்றப்பட்ட ராகவன், படபடவென என்னென்னவோ சொல்கிறார், என்னென்னவோ செய்கிறார் என்றால் அதற்கு மைத்திரியின் கடைக்கண் பார்வை கட்டாயம் இருக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வடபகுதித் தமிழரின் வாக்குகளை கூட்டமைப்பினரே மைத்திரிக்கும் ரணிலுக்கும் பெற்றுக் கொடுத்தனர் என்று அவர்களே பலதடவை கூறியுள்ளனர்.

இப்போது கூட்டமைப்பினர் மைத்திரி பக்கம் இல்லை. ரணிலுடன் அவர்கள் இரண்டறக் கலந்துவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு வாக்குகளின் ஒரு பகுதியையாவது தம் பக்கம் இழுக்க ராகவனை மைத்திரி ஆளுனராக நியமித்து அங்கு அனுப்பியுள்ளாரென்று நம்புவதற்கு இடமுண்டு. இயலுமானவரை தமிழர் வாக்குகளை பிளந்திட ராகவன் மைத்திரிக்கு உதவக்கூடும்.

இவ்விடத்தில் ராகவன் பற்றிய இன்னொரு குறிப்பையும் தெரிவிக்க வேண்டும். இவர் ஒட்டாவா பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராகப் பணியாற்றியதாக இவரது நியமனத்தின்போது ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடக அறிக்கை தெரிவித்தது. ஆனால், இவர் அவ்வாறு எந்தப் பதவியும் வகிக்கவில்லையென்றும், அப்பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கொன்றில் உரையாற்றியது மட்டுமே அப்பல்கலைக்கழகத்துக்கும் இவருக்குமுள்ள தொடர்பு என்றும் தெரிய வந்துள்ளது.

சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக வந்தபோது அவர் பிரான்ஸ் பல்கலைக்கழகமொன்றின் பட்டதாரியென்று பொய் கூறி அகப்பட்ட கதை போன்றதாக ராகவனின் கதையும் இருக்கலாம். அரசியலில் இதுவெல்லாம் சகஜம் போலும்.

அடுத்து, சுமந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகளை அணுகலாம். இவரது அரசியல் வாழ்க்கை முதல் பத்தாண்டை இன்னமும் பூர்த்தி செய்யவில்லையென்பதை இங்கு முதலிலேயே குறிப்பிட வேண்டும்.

கூட்டமைப்பில் எல்லோரும் தமக்குப் பின்னால் தானென்று படம் காட்டும் போக்கில் இவரது அரசியல் வியாக்கியானங்கள் அமைந்துள்ளன. கூட்டமைப்புக்கு சம்பந்தன் என்றொரு தலைவர் இருப்பதை மறக்கும் வகையில் இவருக்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

ஒற்றையாட்சிக்கும் ஒருமித்த நாட்டுக்கும் ரணிலுக்கோ, மைத்திரிக்கோ, மகிந்தாவுக்கோ தெரியாத அல்லது புரியாத அரசியல் விளக்கங்களை அதிமேதாவித்தனமாகக் கூறி வருகிறார்.

பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வரப்போவதாக செல்லுமிடமெங்கும் சொல்லி தமிழர் காதுகளில் பூ வைக்கிறார். அது சாத்தியமில்லையென்பதை சிங்களவர் மட்டுமன்றி தமிழரும் நன்கறிவர்.

மூன்றரை ஆண்டுகளாக தைப்பொங்கல், தீபாவளி, புதுவருடம் ஒவ்வொன்றின்போதும் நம்பிக்கை கூறி வந்த சம்பந்தனின் அறிவிப்புகள் காற்றோடு பறந்து விட்டன. இப்போது சுமந்திரன் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளை நம்பிக்கை நாளாக பிரகடனம் செய்துள்ளார்.

ஆனால், அவரது வட்டத்துக்குள்ளிருந்தே கருத்துகள் மோதுகின்றன. அரசாங்கம் தங்களை ஏமாற்றுகிறது என்று குழம்புகிறார் மாவை சேனாதிராஜா. புதிய அரசியலமைப்பு ஒருபோதும் சரிவராது என்கிறார் புளொட் சித்தார்த்தன். ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் கள்ள மௌனம் மேற்கொள்கிறார்.

ரணில் பின்வாங்க மாட்டாரென்று இன்னும் குருட்டு ஆரூடம் கூறுகிறார் சம்பந்தன்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். இம்மாதம் முற்பகுதியில் இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது 56 உறுப்பினர்கள் மட்டுமே பங்குபற்றினர் என்றால் இதன் எதிர்காலத்தை உய்த்துணரலாம்.

இதற்கிடையில் கடந்த வார இறுதியில் தமக்கான கூட்டமொன்றை சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்தார். இதில் உரையாற்றிய ஷகாலைக்கதிர்| பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அடுத்தடுத்து தொடுத்த கேள்விகள் சுமந்திரனை திக்குமுக்காடச் செய்தது.

தமிழரசுக் கட்சியின் ஆண்டுக் கணக்குகள் காட்டப்படாதமை, சிங்கள தேசப் பிரச்சனையில் ரணிலுக்கு ஆதரவு வழங்கியமை, தமிழரசுக் கட்சியினரை விடுதலைப் புலிகள் கொலை செய்ததால்தான் அவர்களுடன் ஷடீல்| செய்யப்பட்டதாக கூறப்படுவது, தனது கையாட்களை வைத்து விடுதலைப் புலிகள் தொடர்பான பிரச்சனைக்குரிய அம்சங்களை வெளிப்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் சுமந்திரன் மீது வித்தியாதரனால் சுமத்தப்பட்டது.

நடிகர் வடிவேலுவின் உரையாடலொன்றை வித்தியாதரன் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி சுமந்திரனை நிலைதடுமாறச் செய்தார். இவரது கேள்விகள் எதற்கும் சுமந்திரன் இதுவரை பதில் சொல்லவில்லை. ஆனால், பருத்தித்துறையில் தாமே ஏற்பாடு செய்த தமக்கான கூட்டமொன்றில் காலைக்கதிரை கறுப்புப் பத்திரிகை என்பது போலவும், வித்தியாதரனை மகிந்தவின் சகா என்பது போலவும் குறிப்பிட்டு தமது அரைகுறை அரசியல் பார்வையை வெளிப்படுத்தினார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாக செயற்படுவதற்கு தமக்குள்ள தகுதிகளை மக்கள் முன்னால் நிலைநாட்ட சுமந்திரன் முயற்சிக்கிறார். மைத்திரியின் வெற்றிக்காக தம்மால் வடக்கில் தமிழருக்கு ஆதரவாக செயற்படுவது போன்ற தோற்றத்தை நிலைநாட்டுவதில் ஆளுனர் ராகவன் முயன்று வருகிறார். இது எதுவும் தமிழருக்கு தெரியாதவையல்ல.

ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் என்பதுபோல, தாயகத்தமிழர் இருவருக்குமிடையே நசிபடும் நிலைமை இப்போது வியாபித்து வருவது பரிதாபத்திற்குரியது.

No comments