நாடாளுமன்ற தெரிவுக்குழு நேரலை இரத்து – சுதந்திர ஊடக அமைப்பு எதிர்ப்பு!
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வது இரத்து செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்தது.
பின்னர் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில் இந்த நேரலை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நேரலை இரத்து செய்யப்பட்டமையானது தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை முடக்கும் வகையிலானது என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த இருவரும் இன்று(வியாழக்கிழமை) விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
Post a Comment