மக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தாக்குதாரியின் உடல் இரகசியமாக காட்டுப் பகுதியில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
அதற்கமைய வாழைச்சேணை – ரிதிதென்னை இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள காட்டுப்பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பயங்கரவாதிகளின் உடலைப் புதைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்தவரின் உடற்பாகங்கள் நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைய, மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக குறித்த பகுதியில் அடக்கம் செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து மட்டக்களப்பு, காத்தான்குடி உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல்தாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த தாக்குதல்தாரியின் உடலை பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரகசியமாகப் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த காட்டுப்பகுதி மட்டக்களப்பிலிருந்து சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பிரதேசமென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment