Header Ads

test

சர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 200இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த மக்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு, அனுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து இரு பேருந்துகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  காலை அழைத்துச்செல்லப்பட்டுள்ள மக்களே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பௌத்த மதகுருமார் அடங்கிய குறித்த குழுவினர், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, சற்றுநேரத்தில் ஆரப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமார் மற்றும் 200இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய பௌத்த மதகுருமார், இந்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments