Header Ads

test

சர்வதேச நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதிப்பு!

ஐ.நா. பாதுகாப்பு சபை உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதித்துள்ளது.
சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன்போதே இந்தக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டத்தின்போது பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கும் விவகாரத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.
பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என்றும், பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் சில நாடுகளினால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செய்றபாட்டையே பாகிஸ்தான் மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த பாகிஸ்தான், லஷ்கர்- ஈ- தொய்பா, ஜெய்ஷ்- ஈ- முகமது போன்ற பயங்கரவாத அமைப்புக்களின் 700 சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இந்தக் கூட்டத்தின்போது குறிப்பிட்டது.
எனினும், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்பகள் மீது பாகிஸ்தான் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.
இந்த நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உத்தவுக்கு இணங்க, பாகிஸ்தானில் செயற்படும் பயங்கரவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனை நிறைவேற்ற பாகிஸ்தான் தவறுமாக இருந்தால், தொடர்ந்தும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

No comments