ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வியாழேந்திரனால் மூன்று முறைப்பாடுகள் பதிவு!
முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் மூன்று முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவ்வகையில், மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற வியாழேந்திரன் குறித்த முறைப்படினை பதிவு செய்தார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கூறுகையில், “இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.
ஒன்று ஓட்டமாவடியில் இருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காளிகோயிலை உடைத்து காளிகோயில் காணியில் ஹிஸ்புல்லாஹ்வினால் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பதவியை பயன்படுத்தி மீன் சந்தை கட்டியமை குறித்து முறைப்பாடு அளித்துள்ளேன்.
அத்துடன், தனக்குச் சார்பாக தீர்ப்பு சொல்லாத நீதிபதியை இடம்மாற்றி தனக்கு சார்பான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதியமை, இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு நடைபெற்ற மறுநாள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் பாசிக்குடா விடுதியில் இருந்த மூன்று அரேபியர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற்றியமை அதில் ஒருவர் விசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குற்றச்சாட்டுகளாக முன்னைத்துள்ளதோடு, இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை ஹிஸ்புல்லாஹ் மீது யாரும் பகிரங்கமாக முறைப்பாடு பதிவு செய்யாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மாத்திரம் குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment