Header Ads

test

மாங்குளத்தில் அரச வீட்டுத்திட்டம் அமைக்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

மாங்குளத்தில் புதிதாக அரச அதிகாரிகளுக்கான வீட்டுத் திட்டம் அமைக்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறு அரச அதிகாரிகளுக்கென கட்டப்பட்ட பல வீடுகள் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் இவ்வாறான குடியிருப்புக்களை கட்டுவது தொடர்பாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில் அரச உத்தியோகத்தர்கள் 50 பேருக்கான வீடுகள் அமைக்கப்பட்டன.
குறித்த பகுதியில் வீடுகளை அமைத்து அங்கு குடியேறும் அரச உத்தியோகத்தர்களுக்கான மின்சாரம், வீதி, குடிநீர் போன்ற வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட நிலையிலும் அவ்விடத்தில் இன்று வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை.
இந்நிலையில் குறித்த வீடுகள் அனைத்தும் பற்றைகளால் சூழப்பட்டு காடாக கிடப்பதோடு, அந்தப் பகுதிகளில் பல்வேறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோபோல், துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நந்தகுமார் நகர் மாதிரி கிராம, மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வடகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கைலாய வன்னியன் மாதிரி கிராமம், பண்டாரவன்னியன் மாதிரி கிராமம் ஆகிய  அரச உத்தியோகத்தர்களின் வீட்டுத்திட்ட வீடுகளும் பூட்டப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றன.
எனவே, இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுக்கு அமைக்கப்படுகின்ற வீடுகள் தொடர்ச்சியாக பயன்பாடற்று கிடக்கின்ற நிலையில் இப்போது புதிதாக ஏ-9 வீதி மாங்குளத்தில் ஒரு அரச விட்டு திட்டத்தை கொண்டு வருவதற்காக அரசு அதிகாரிகள் மும்முரமாக முயற்சித்து வருகிறார்கள்.
எனவே, ஏற்கனவே அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகளில் அரச அதிகாரிகளை குறியேற்றுமாறும் அல்லது அவ்வீடுகளை வீடற்ற மக்களுக்கு வழங்குமாறும் மக்கள் கோருகின்றனர். அவ்வாறு செயற்படுத்திவிட்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வேறு இடங்களில் வீட்டுத் திட்டங்களை வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் மக்களுடைய எந்த கோரிக்கையையும் செவிசாய்க்காது புதிதாக வீட்டுத் திட்டத்தை அமைத்து ஏ-9 வீதியோரத்தில் காணிகளை பெறுவதற்காக சில தரப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்

No comments