Header Ads

test

கட்சி குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது: அ.தி.மு.க

கட்சி செயற்பாடுகள் குறித்து பொதுவெளியில் தொண்டர்கள் பேசக்கூடாதென அ.தி.மு.க தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.நிர்வாகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“அ.தி.மு.க.இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயற்படும் ஒப்பற்ற இயக்கம் எனவும் விசுவாசமாய் செயற்படும் தொண்டர்களைக் கொண்ட நிகரில்லாத இயக்கமென்றும் எல்லோரும் பார்த்து வியந்தார்கள். எதிரிகள் கூட நம்மைப் போன்று இருக்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள்.
ஆனால் தற்போது கழக  உறுப்பினர்கள் சிலர், அ.தி.மு.க.வின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள்  வரவேற்கத் தக்கவையாக இல்லை.
அத்துடன் கழகத்தின் மீதுள்ள பற்று  காரணமாகவே இத்தகைய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனாலும் தற்போதைய சூழ்நிலை அறிந்து செயற்பட வேண்டும். இல்லாவிடின்  நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு இது உதவியாக அமைந்துவிடும்.
கட்டுப்பாடும், ஒழுங்கும் நமக்குத் தேவை. இவைகளை வைத்தே  இந்த உலகம் ஒரு இயக்கத்தை மதிப்பிடும்.
மேலும் கழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை  கூற விரும்புபவர்கள் செயற்குழு- பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றில் வெளிப்படுத்த முடியும்.
ஆகையால் கழக உறுப்பினர்கள், கழக நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கழகத்தின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களைக் கூறாமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டலை பின்பற்றி செயற்பட வேண்டும்” என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments