இலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ்.! – வெளிவரும் புதிய தகவல்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியிருந்தது.
எனினும் இவ்வாறான தொடர் தாக்குதல் இடம்பெற்றிருந்தது குறித்து அந்த அமைப்பு ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லையென்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், இஸ்லாமிய கடும்போக்கு உள்நாட்டவரும், ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளருமான ஒருவர், ஐ.எஸ் அமைப்பின் தலைமையுடன் தொடர்பு கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த சந்தேக நபர், மூன்றாவது தரப்பு ஒன்றின் ஊடாக, ஐ.எஸ் தலைமையுடன் தொடர்புகொண்டு, தங்கள் உயிர்களை தியாகம் செய்த ஜிகாத் பயங்கரவாதிகளை ஐ.எஸ் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டாரென்றும் அதன் பின்னரே, ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்கு உரிமை கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்று சுமார் 48 மணித்தியாலங்களின் பின்னரே ஐ.எஸ். அமைப்பு அந்த தாக்குதலுக்கு உரிமை கோரியதுடன், இலங்கையில் தாக்குதல் நடத்திய குண்டுதாரிகள், ஐ.எஸ். அமைப்புக்கு நம்பிக்கையாக உறுதியேற்கும் காணொளியையும் ஐ.எஸ். அமைப்பின் அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்டதென்றும் குறித்த அதிகாரி அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். அமைப்பின் கறுப்பு கொடியின் முன்பாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் தவிர்ந்த ஏனையோர், தமது முகங்களை மூடி மறைத்திருக்கும்படியாக அந்த காணொளி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.எஸ் அமைப்பின் இந்த தாமதமான உரிமை கோரல், வழமைக்கு மாறானது என ஐ.எஸ். அமைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் நேரடி தொடர்பிருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள், இதுவரை இலங்கையின் விசாரணையாளர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஐ.எஸ். அமைப்பின் அனுதாபிகள் என்றும் ஆனால் அவர்கள் ஐ.எஸ். அமைப்புடன் எவ்வாறு தொடர்புகளை பேணிவந்தனர் என்பதற்கான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களான வேறு சில கடும்போக்காளர்களையும் தாம் கண்டுபிடித்துள்ளோம் என விசாரணையுடன் தொடர்புபட்ட அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐந்து இலங்கை சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளும் விசாரணைகளிலிருந்து, மேலும் முக்கியமான பல தகவல்களை எதிர்வரும் வாரங்களில் பெற முடியும் என விசாரணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் அந்த ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
Post a Comment