Header Ads

test

ஐ.எஸ். உடன் இலங்கையிலிருந்து பேசிய ஐந்து தொலைபேசி இலக்கங்கள் குறித்த தகவல் வெளியானது!

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இலங்கையிலிருந்து பேசியுள்ள ஐந்து தொலைபேசி இலக்கங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கங்களை இந்திய புலனாய்வாளர்கள் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,
உயிர்த்த ஞாயிறு தற்கொலையாளிகள் இருவருடன் தொடர்பில் இருந்த சில இந்தியர்கள் பற்றிய தகவல்களையும், இந்தியா பகிர்ந்துள்ளது.
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு நேரடியாக வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளில் உதவிபுரிந்தனர்.
இலங்கை ஐ.எஸ் வலையமைப்புடன் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களும் நெருக்கமான தொடர்பை பேணியதால், இலங்கை தாக்குதல் விபரத்தை இந்தியா ஆரம்பத்திலேயே கண்டறிந்திருந்தது.
இந்த விசாரணைகளில், இந்தியாவிலிருந்து இரண்டு ஐ.எஸ் அமைப்பின் தொடர்பிடங்களிலிருந்து இலங்கையுடன் தொடர்பு கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.
தொலைபேசி வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவே இந்தியாவிலிருந்து தொடர்பு கொள்ளப்பட்ட 4 அல்லது 5 இலங்கை தொலைபேசி இலக்கங்களை, கண்டறிந்துள்ளது. அது குறித்த தகவல்கள் இலங்கை புலனாய்வுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிலுள்ள சில சந்தேகத்திற்கிடமான ஐ.எஸ் வலையமைப்புக்களின் வெளிநாட்டு அழைப்புக்களை NIA ஆய்விற்குட்படுத்தியபோது, கோயம்புத்தூர் சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
பின்னர் கேரளாவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். ரியாஸ் அபூபக்கர் என்ற அந்த நபர், சஹ்ரானின் பேச்சுக்களை கேட்டு, தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்தது விசாரணைகளில் தெரிய வந்திருந்தது.
இதேவேளை, தற்கொலைதாரிகளான இன்சாப், இல்ஹாம் சகோதரர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த சில சந்தேகநபர்களின் விபரங்களையும் NIA அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
வர்த்தகர் இப்ராஹிமின் மகன்களான அவர்களுடன், இந்த இந்தியர்கள் எப்படியான தொடர்பை வைத்திருந்தார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ஏனெனில், ஹாஜியாரின் குடும்பம் இந்தியாவில் கணிசமான வர்த்தக தொடர்பையும் பேணியுள்ளது. ஹாஜியார் தற்போது விசாரணையில் உள்ளதால், அந்த தொடர்பு வர்த்தக நோக்கமுடையதா அல்லது ஐ.எஸ் தொடர்பா என்ற விசாரணைகள் நடந்து வருகிறது.
இலங்கை தற்கொலைதாரிகளுடன் நெருக்கமாக இருந்த ஆதில் அமீஸ் ஏற்கனவே இந்தியாவின் கண்காணிப்பில் இருந்தவர். Adhil Ax என்ற பெயரில் ஐ.எஸ் ஆதரவு இணைய தொடர்பாடல் குழுக்களில் அங்கம் வகித்து வந்துள்ளார். இந்த குழுக்கள் “Islam Q&A” என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments